திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயம்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்தனர்.
திருப்பதியில் தரிசனத்திற்காக புறவழிச்சாலையில் காத்திருந்த பக்தர்கள் வரிசையில் தள்ளுமுள்ள ஏற்பட்ட காட்சி.
திருப்பதியில் தரிசனத்திற்காக புறவழிச்சாலையில் காத்திருந்த பக்தர்கள் வரிசையில் தள்ளுமுள்ள ஏற்பட்ட காட்சி.
Published on

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் நேற்று ஏழுமலையானை தரிசிக்க 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

அவர்கள் அனைவரும் கியூ காம்ப்ளக்ஸ் 64 அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த அறைகள் அனைத்தும் நிரம்பியதால், நாராயணகிரி வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அதுவும் நிரம்பி திருமலையை சுற்றி வெளிவட்ட சுற்று சாலைவரை சுமார் 6 கி.மீ. தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அந்த பக்தர்கள் அனைவரும் 32 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் நேற்று காலை 8 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பதியில் நாராயணி வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் காத்திருந்த பக்தர்கள்.

வெளிவட்ட சுற்றுச் சாலையில் பக்தர்கள் நின்ற தரிசன வரிசையில் கூட்ட நெரிசலால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து சென்று கூட்டத்தை சரி செய்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அஸ்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

துவாதசியான இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. திருப்பதி வராக சுவாமி கோவில் அருகில் உள்ள தெப்பக் குளத்தில் அதிகாலை 4.30 மணியளவில் சக்கரத் தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். இன்று காலை 5 மணியில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் குளிர் காற்றும் வீசுகிறது. இதனால் பக்தர்கள் அவதியடைந்தனர்.

கடந்த 28-ந்தேதியில் இருந்து 1-ந்தேதி வரை வி.ஐ.பி, நடைபாதை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பக்தர்களும் இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று சுமார் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இன்று தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஏற்கனவே காத்திருக்கும் பக்தர்கள் இன்று இரவு 12 மணி வரை வைகுண்ட வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு சிறப்பு தரிசனத்தை ரத்து செய்ததால் அன்று வரவேண்டிய பக்தர்கள் இன்று வந்துள்ளதாகவும், இதனால் தான் திருப்பதியில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாகவும் தேவஸ்தான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com