

புதுடெல்லி:
டெல்லி தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு தலைமை செயலாளராக இருப்பவர் அன்ஷு பிரகாஷ். அரசாங்கத்தின் விளம்பர செலவு அதிகரித்து வருவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இரவு முதல்-மந்திரி கெஜ்ரிவால் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது தலைமைச் செயலாளருக்கும், எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த பிரச்சினையைத் தொடர்ந்து அங்கிருந்து நேராக கவர்னர் மாளிகைக்குச் சென்ற தலைமை செயலாளர், கவர்னர் அனில் பைஜாலிடம் புகார் கொடுத்தார். அதில், பிரகாஷ் ஜர்வால் மற்றும் அமானத்துல்லா கான் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் தன்னை தாக்கியதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, தலைமை செயலாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜர்வாலை 20-ம் தேதி இரவு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிரகாஷ் ஜர்வால் ஜாமீன் கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த முக்தா குப்தா, இதுபொன்ற நடவடிக்கைகளில் இனி ஈடுபட கூடாது என்ற எச்சரிக்கையுடன் பிரகாஷ் ஜர்வாலை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும் தலைமை செயலாளர் அன்ஷு பிரகாஷுக்கு தொல்லை கொடுக்கும் செயல்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிரகாஷ் ஜர்வால் ஈடுபட்டால் அவரது ஜாமீன் உடனடியாக ரத்து செய்யப்படும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கட்சிக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #DelhiHighCourt #AAPMLA #PrakashJarwal #ChiefSecretaryassault #tamilnews