

ஆமாதாபாத்:
குஜராத் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, ஆமதாபாத்தில் உள்ள தோல்கா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பூபேந்திராசிங் சவுடாஸ்மா என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அஸ்வின் ரத்தோட் என்பவர் காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டார். இந்த தேர்தலில் பூபேந்திராசிங் சவுடாஸ்மா வெறும் 327 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அவர் முதல்-மந்திரி விஜய் ரூபானி மந்திரி சபையில் சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரியாக உள்ளார்.
இதனிடையே தேர்தலில் தோல்வியடைந்த அஸ்வின் ரத்தோட் பூபேந்திராசிங் சவுடாஸ்மா வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பரேஷ் உபாத்யாயா முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது பூபேந்திராசிங் சவுடாஸ்மா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என நீதிபதி பரேஷ் உபாத்யாயா தீர்ப்பு அளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில், “பூபேந்திராசிங் சவுடாஸ்மா, ஓட்டு எண்ணிக்கையின் போது முறைகேடாக வெற்றி பெற்றுள்ளார். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றம். எனவே அவரது வெற்றி செல்லாது. தோல்கா சட்டசபை தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்குமாறு உத்தரவிடப்படுகிறது” என குறிப்பிட்டார்.
ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக பூபேந்திராசிங் சவுடாஸ்மா தெரிவித்துள்ளார். இதனிடையே பூபேந்திராசிங் சவுடாஸ்மா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.