

திருக்கனூர்:
திருக்கனூர் அருகே கைக்ளப்பட்டு- சுத்துக்கேணி கிராமத்துக்கு இடையே சங்கராபரணி ஆற்றில் ரூ.35 கோடி செலவில் படுகை அணையுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேம்பால கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் இணைப்புசாலை பணி தாமதமாகி வருகிறது. இதற்கு அருகில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான நிலம் தேவைப்படுவதால் இணைப்புசாலை பணி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இந்த மேம்பாலத்துக்கு மண் நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கவர்னர் கிரண்பேடிக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி இன்று காலை மேம்பால பணியை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மண் நிரப்புவது குறித்து புகார் பற்றி விசாரித்தார்.
மண் எங்கிருந்து கொண்டு வந்து நிரப்பப்பட்டது? என கேள்வி எழுப்பினார். அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் காட்டேரிக்குப்பம் ஏரியில் இருந்து மணல் எடுக்கப்பட்டு நிரப்பப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவர்னர் கிரண்பேடி காட்டரிக்குப்பம் ஏரிக்கு காரில் சென்றார். காரைவிட்டு இறங்கி கவர்னர் கிரண்பேடி 250 மீட்டர் தூரம் சேறு சகதியில் நடந்து சென்று மண் எடுத்த இடத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து முறைகேடு நடந்ததாக புகார் கூறிய தரப்பினரிடம் கவர்னர் கிரண்பேடி விசாரணை நடத்தினார். இதன்பின்னர் கவர்னர் கிரண்பேடி ராஜ் நிவாசுக்கு புறப்பட்டு சென்றார்.
முனனதாக கவர்னர் கிரண்பேடியிடம் அனைத்து ரேசன் அட்டைகளுக்கு இலவச அரிசி வழங்குவது தொடரும் என்று அரசு அறிவித்துள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து கூறியதாவது:-
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வசதி படைத்தவர்கள் மானிய சிலிண்டர்களை விட்டு தரவேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. அதனை ஏற்று பலர் மானிய சிலிண்டர்களை விட்டு கொடுத்தனர். அதுபோல புதுவையில் எம்.எல்.ஏ.க்கள், வசதி படைத்தவர்கள், அரசு அதிகாரிகள், வருமானவரி செலுத்துவோர் இலவச அரிசியை விட்டு கொடுக்க வேண்டும். இதன் மூலம் மீதமாகும் தொகையை ஏழைகளுக்கு வேறு திட்டங்களுக்கு செலவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உடன்இருந்த தொகுதி எம்.எல்.ஏ.வான டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. தான் இலவச அரிசியை விட்டு கொடுப்பதாக கவர்னரிடம் தெரிவித்தார்.
கடந்தமுறை இந்த மேம்பால பணியை கவர்னர் ஆய்வு செய்ய வந்த போது டி.பி.ஆர். செல்வம் எம்.எல்.ஏ. புறக்கணித்தார். அப்போது காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்த டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தற்போது ரங்கசாமியுடன் இணக்கமாகி விட்டதால் இன்று நடந்த ஆய்வில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.