

புதுச்சேரி:
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல்துறை மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் 20 கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த இலவச அரிசி ஓராண்டு நிறைவுற்ற நிலையில் சுமார் 6 மாத காலத்திற்குத்தான் இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. இதிலும் 2 மாதத்திற்கு கடந்த ஆட்சியில் வழங்காமல் நிலுவையில் இருந்த அரிசியை வழங்குவதாகத்தான் அரசு தெரிவித்திருந்தது.
இலவச அரிசி விநியோகம் செய்யாததற்கு கவர்னரின் அனுமதி கிடைக்காததுதான் காரணம் என கூறப்பட்டது. இலவச அரிசிக்கான கோப்புகளை கவர்னர் மாளிகைக்கு அனுமதிக்காக அரசு அனுப்பினால் கவர்னர் ஏழைகளுக்கு மட்டும் வழங்குங்கள் என கோப்பை திருப்பி அனுப்பி வந்தார்.
இதனால் அரிசி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. பல மாதமாக அரிசி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் கவர்னர் கிரண்பேடி சில நிபந்தனைகளோடு இலவச அரிசி வழங்க அனுமதி அளித்துள்ளார். இதன்படி ஏழைகளுக்கு மட்டும்தான் இலவச அரிசியை வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளார்.
புதுவை மாநிலத்தை பொறுத்தவரை 3 லட்சத்து 36 ஆயிரம் ரேஷன்கார்டுகள் உள்ளது. இதில் மத்திய அரசின் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் என்ற அடிப்படையில் 35 ஆயிரம் கார்டுகள் உள்ளது. இதுதவிர சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கார்டுகள் சிகப்பு நிற ரேஷன்கார்டுகளாக உள்ளது.
மீதமுள்ள சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கார்டுகள் மஞ்சள் ரேஷன் கார்டுகளாகும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்தான் ஏழைகளாக கருதப்படுவர்.
இதன்படி மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு இனி இலவச அரிசி கிடைக்காது. சிகப்பு மற்றும் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் இலவச அரிசி கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே புதுவை அரசு இலவசங்களை தானாக முன்வந்து வேண்டாம் என கூறுபவர்களுக்கு பச்சை நிற கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.
ஆனால் இதற்கு பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. புதுவையில் 35 ஆயிரம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்கள் உள்ளனர். வருமான வரி செலுத்துவோர், வணிக வரி செலுத்துவோர் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர்.
சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை வசதி படைத்தவர்களாக எளிதில் கணக்கெடுக்க முடியும். இந்த கணக்கெடுப்பு நடத்தி கார்டுகளை முறைப்படுத்த வேண்டும். அதேநேரத்தில் வசதிபடைத்தோர் சிகப்பு கார்டும், ஏழைகள் மஞ்சள் கார்டும் வைத்துள்ளனர். இந்த குறைபாடுகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.
அதற்கு முன்பாக ஏழைகளுக்கு மட்டுமே இலவச அரிசி என்ற பொதுவான கவர்னரின் இந்த உத்தரவு புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.