

புதுச்சேரி:
புதுவையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி ஏற்ற நாள் முதலே கவர்னர் கிரண்பேடியுடன் மோதல் இருந்து வருகிறது.
யூனியன் பிரதேசமான புதுவையில் கவர்னருக்கே முழுமையான அதிகாரம் என கூறி கிரண்பேடி அரசின் அன்றாட நடை முறைகளில் கூட தலையிட்டு வருகிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இருக்கும் போது கவர்னருக்கு அதிகாரம் இல்லை என முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் கவர்னர் கிரண்பேடி சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர் காப்பகத்தில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து பொதுப் பணித்துறை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சாலை சீரமைப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.
கவர்னர் கிரண்பேடியின் இந்த நடவடிக்கைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்தார். மேலும் தனது அதிகார வரம்பை மீறும் கிரண்பேடி மீது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுடன் நேரடியாக டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் புகார் செய்யப் போவதாக அறிவித்தார்.
ஏற்கனவே கடந்த சுதந்திர தின விழாவின் போது, கவர்னர் கிரண்பேடி அளித்த தேனீர் விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பெயரளவில் மட்டுமே பங்கேற்றார். அதோடு தேனீர் அருந்தாமல் விருந்தில் இருந்து வெளியேறினார். அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.
இதனால் தற்போது மோதல் முற்றியுள்ள நிலையில் குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் அளிக்கும் தேனீர் விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேர் எதிர்மறையாக நேற்று மாலை கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது அமைச்சரவை சகாக்கள், எம்.எல்.ஏ.க்களுடன் பங்கேற்றார்.
சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடிகிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, தீப்பாய்ந் தான், தி.மு.க. எம்.எல்.ஏ. சிவா, புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அதே நேரத்தில் கவர்னரின் விருந்தை பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் புறக்கணித்தது. எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
கவர்னரின் செயல்பாட்டை கண்டித்து குடியரசு தின தேனீர் விருந்தை புறக்கணிப்போம் என ஏற்கனவே அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் அறிவித்திருந்தார். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தேனீர் விருந்தில் பங்கேற்கவில்லை.
அதே நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையிலான அ.தி.மு.க.வின் மற்றொரு பிரிவினர் கவர்னர் கிரண்பேடி அளித்த தேனீர் விருந்தில் பங்கேற்றனர். #tamilnews