

புதுடெல்லி:
சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பின் 100 செய்தியாளர்கள் உலக தலைவர்கள், பிரபலங்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் பற்றி ரகசியமாக தகவல்களை திரட்டி வந்தனர். இந்த தகவல்கள் அனைத்தும் ‘பனாமா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் 2016-ம் ஆண்டு வெளியாகியது. இதில் 500க்கும் அதிகமான இந்தியர்களின் பெயர் இடம்பெற்றது, இது தொடர்பாக விசாரணையும் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது. பனாமா பேப்பர்ஸ் மூலமாக வெளியான தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையும் கோரப்பட்டது.
இப்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது மற்றும் வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான தகவல்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் வெளியாகி உள்ளது. உலகில் சக்திவாய்ந்த தலைவர்களாக கருதப்படும் டொனால்டு டிரம்ப், விளாடிமீர் புதின், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் பிற உலக அரசியல் தலைவர்களுக்கான தொடர்பும் இப்போது கசிந்து உள்ள தகவலில் தெரியவந்து உள்ளது. அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற ரஷியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு மற்றும் விசாரணை தொடரும் நிலையில் இப்போது கசிந்து உள்ள தகவலின்படி முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இப்போது வெளியாகி உள்ள தகவலின்படி டொனால்டு டிரம்பின் வர்த்த செயலாளர், ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் உறவினர்களுடன் தொழில் உறவுகள் வைத்திருப்பது தெரியவந்து உள்ளது. இது அமெரிக்காவில் மீண்டும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்முடா நாட்டின் ‘ஆப்பிள்பை’ நிறுவனம், சிங்கப்பூரின் ஏசியாசிட்டி நிறுவனம் ஆகியவை இந்தியா உட்பட உலகமெங்கிலும் உள்ள மிகப்பெரிய பணக்காரர்களுக்கு வரி ஏய்ப்பு செய்ய உதவி உள்ளது என இப்போதைய பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் தெரியவந்து உள்ளது. வரி ஏய்ப்பு செய்யவும், கருப்பு பணத்தை குவிக்கவும், சொத்துக்களை வாங்கிக் கொடுக்கவும் இந்நிறுவனங்கள் செயல்பட்டது இப்போது தெரியவந்து உள்ளது. வெளிநாட்டு சட்ட உதவி மையமான ஆப்பிள்பை நிறுவனத்திடம் இருந்து ரகசியமாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆவணங்கள் ஆகியவற்றின் மூலம், பல இந்தியர்கள் உட்பட, கார்பரேட் நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள் ஆகியவை எப்படி வரி ஏய்ப்பு செய்து சொத்துக்களை சேர்த்துள்ளது என்ற விபரங்கள் வெளியாகி உள்ளது.
புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு மூலம் விசாரிக்கப்பட்டு 13.4 மில்லியன் பக்கங்கள் கொண்ட இந்த பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியாகி உள்ளது. ஜெர்மன் செய்தித்தாளான ‘சுடூஸ்ச்சே செய்டங்’ மூலம் பெறப்பட்டு புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பு மூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியாகி உள்ள தகவல்களில் மொத்தமாக 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்பிள்பை நிறுவனத்தில் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் வழக்கறிஞர்கள், கணக்காளர்கள், வங்கியாளர்கள் மற்றும் இதர துறையை சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிறுவனம், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மற்றும் ஆஃப்ஷோர் கம்பெனிகளை (வெளிநாடுகளில் உருவாக்கப்படும் கம்பெனிகள்) நிர்வகிக்கிறது. வரி செலுத்தாமல் தவிர்க்க அல்லது தப்பித்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்குகிறது. ரியல் எஸ்டேட் சொத்துகளை நிர்வகிப்பதிலும், ‘எஸ்க்ரோ’ அக்கவுண்ட்களை திறக்கவும், குறைந்த வரியில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் வாங்கவும் இந்நிறுவனம் துணைபுரிகிறது.
ஆப்பிள்பை நிறுவனத்தில் இந்தியாவில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு கண்காணிப்பில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளது. இப்போது வெளியாகி உள்ள இந்த நிதி ஆவணங்கள் தொடர்பாக விசாரணைக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வருமான வரித்துறை தலைவர் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானத்துறை இணை மந்திரி ஜெயந்த் சின்ஹா, பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி. ஆர்கே சிங்கா மற்றும் அமிதாப் பச்சன் பெயர் இதில் இடம்பெற்று உள்ளதாக புலனாய்வு பத்திரிகையாளர்கள் சர்வதேச கூட்டமைப்பில் இடம்பெற்று உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டு உள்ளது.