

திருவெறும்பூர்:
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலத்தில் சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்திற்கு திருச்சி மாநகரம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு பவுடராக மாற்றி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இதற்காக பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக நிறுவனத்தின் அருகிலேயே குடோன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஏராளமான பழைய பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டு மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் குடோனின் முன்பு திறந்த வெளியிலும் பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் இன்று காலை திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடோன் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர்.
ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதாலும், காற்று பலமாக வீசியதாலும் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தன. குடோனுக்குள்ளும் தீ பரவி அங்கிருந்த பொருட்களும் எரிய தொடங்கின. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் உருவானது.
இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி கண்டோன் மெண்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படவே, மேலும் 3 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தண்ணீர் அதிகம் தேவைப்பட்டதால் 6 குடிநீர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து அங்கு தீயணைப்பு பணி நடைபெற்று வருகிறது.
பிளாஸ்டிக் குடோனை ஒட்டி திருச்சி-தஞ்சாவூர் சாலை மற்றும் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. சாலைகளில் புகை மூட்டம் பரவியதால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், ரெயில்களில் சென்ற பயணிகளும் பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற முறையில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை குவித்து வைத்ததன் காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளன. இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக் குடோனை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் அரியமங்கலம் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் தீப்பிடித்து எரிந்தன. நேற்று முன்தினம் தான் அங்கு முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் அங்கிருந்து வெளியேறும் கரும்புகை மூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அரியமங்கலம் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.