

கொல்கத்தா:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், அத்தியாவசிய காரணங்கள் இன்றி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் குறைவான எண்ணிக்கையிலான நபர்கள் கலந்துகொள்ள மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அம்மாநிலத்தின் பஷ்சிம் மெடினிபூர் மாவட்டம் ஷோகாஇஸ்மாயில்பூர் கிராமத்தை சேர்ந்த பவன் ஜனா என்ற நபர் கடந்த 17ஆம் தேதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட அந்த நபர் பாஜக கட்சியை சேர்ந்தவர் ஆவார்.
இதையடுத்து, பவனை கொன்றது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர். மேலும், உயிரிழந்த பவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் உள்பட கட்சியை சேர்ந்த 150 பேர் கடந்த 20 ஆம் தேதி சுபாஷ் நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் கூட்டமாக கூடினர்.
இந்த கூட்டத்திற்கு மாநில போலீசாரிடம் பாஜகவினர் எந்த அனுமதியும் வாங்கவில்லை.
இந்நிலையில், ஊரடங்கு அமலில் உள்ளபோது உரிய அனுமதி இன்றி கட்சி அலுவலகத்தில் கூட்டம் கூடியதற்காக பாஜக தலைவர் திலீப் கோஷ் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்களான ஜோதிர்மெ மஹொத், போஸ் ஆகியவர்கள் மீது மேற்குவங்காள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், பவன் ஜனா தனிப்பட்ட காரணங்களுக்காகவே கொல்லப்பட்டுள்ளதாக மேற்கு வங்காள போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய 6 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.