

சென்னை:
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 19 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பில், தமிழ் வளர்ச்சிக்காக தனி ஆளாக தொண்டு செய்தும், தமிழ் அமைப்பு வைத்து தமிழ் மொழிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்ற அளவில் வழங்கப்படும். விருது பெறுபவருக்கு ரூ.25 ஆயிரத்திற்கான விருது தொகையும், தகுதியுரையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு அரசு 2015-ம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், 2019-ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட கோ.ப.செல்லம்மாள் (சென்னை மாவட்டம்), மரியதெரசா (திருவள்ளூர்), எஸ்.ஸ்ரீகுமார் (காஞ்சீபுரம்), ச.இலக்குமிபதி (வேலூர்), அ.க.ராசு (எ) பாளைவேந்தன் (கிருஷ்ணகிரி), எறும்பூர் கை.செல்வகுமார் (திருவண்ணாமலை),
வீ.கோவிந்தராசன் (விழுப்புரம்), எஸ்.எம்.கார்த்திகேயன் (கடலூர்), த.மாயகிருட்டிணன் (பெரம்பலூர்), து.சேகர் (அரியலூர்), வ.முத்துமாரய்யன் (சேலம்), மா.ராமமூர்த்தி (தர்மபுரி), ப.சுப்பண்ணன் (நாமக்கல்), எண்ணம்மங்கலம் அ.பழனிசாமி (ஈரோடு),
சு.இளவரசி (கரூர்), அ.ஞானமணி (கோவை), முத்து சுப்ரமணியன் (திருப்பூர்), சபீதா போஜன் (நீலகிரி), அ.அந்தோணி துரைராஜ் (திருச்சி), அ.அ.ஞானசுந்தரத்தரசு (புதுக்கோட்டை), சொ.பகீரதநாச்சியப்பன் (சிவகங்கை), ஆதி நெடுஞ்செழியன் (தஞ்சாவூர்),
இரா.கல்யாணராமன் (திருவாரூர்), சி.சிவசங்கரன் (நாகை), மை.அப்துல்சலாம் (ராமநாதபுரம்), பி.சங்கரலிங்கம் (மதுரை), அ.சு.இளங்கோவன் (திண்டுக்கல்), சா.பி.நாகராசன் என்ற தேனி ராஜதாசன் (தேனி), இரா.இளவரசு (விருதுநகர்), க.அழகிரிபாண்டியன் (நெல்லை),
நம்.சீனிவாசன் (தூத்துக்குடி), குமரிஆதவன் (கன்னியாகுமரி), ந.கருணாநிதி (திருப்பத்தூர்), வத்சலா சேதுராமன் (செங்கல்பட்டு), த.தினகரன் (ராணிப்பேட்டை), உமாகல்யாணி (தென்காசி மாவட்டம்), பெ.அறிவழகன் (கள்ளக்குறிச்சி மாவட்டம்) ஆகிய 37 விருதாளர்களில் 19 பேருக்கு முதல்-அமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் செம்மல் விருதிற்கான விருது தொகை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்குவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.