ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டினால் ஜெயில் தண்டனை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுவார்கள் என போலீஸ் சூப்பிரண்டு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயில் தண்டனை
ஜெயில் தண்டனை
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 820 சாலை விபத்துகள் நடந்துள்ளன.

இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1000 பேர் காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சாலை விபத்துகளை குறைப்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தபோது மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் நடந்தது தெரியவந்தது.

இதனையடுத்து மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து ஈஸ்வரன் கோவிந்தசாமி மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை மாவட்டம் களம்பூரை சேர்ந்த மணிகண்டன் (வயது35), ஆற்காட்டை சேர்ந்த முத்து (27) குடித்துவிட்டு போதையில் பைக் ஓட்டி வந்தனர்.

போலீசார் அவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது மணிகண்டனுக்கு 30 நாள் சிறை தண்டனையும் அவருக்கு லைசென்ஸ் இல்லாததால் மேலும் ஒரு வாரம் சிறை தண்டனையும் முத்துவிற்கு 30 நாட்கள் சிறை தண்டனையும் அவர் வைத்திருந்த டிரைவிங் லைசென்சை ரத்து செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து2 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். முத்துவின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் கூறுகையில்:-

மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதனால் அவர்களது குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் மோட்டார் வாகன விதிகளை மதித்து செயல்படவேண்டும். சாலை விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டினால் கோர்ட்டு மூலம் சிறை தண்டனை மற்றும் டிரைவிங் லைசென்ஸ் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com