search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் மெசேஜ் அனுப்பி பணம் இரட்டிப்பு தருவதாக என்ஜினீயரிடம் ரூ.2 லட்சம் பறித்த இளம்பெண்
    X

    செல்போனில் மெசேஜ் அனுப்பி பணம் இரட்டிப்பு தருவதாக என்ஜினீயரிடம் ரூ.2 லட்சம் பறித்த இளம்பெண்

    • விஜயகுமார் முதலில் அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி கிரிப்டோ டாஸ்க் செய்து முடித்தார்.
    • விரக்தி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சேதராப்பட்டு:

    புதுவை வில்லியனூர் அடுத்த மேல்திருக்காஞ்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மகன் விஜயகுமார் (வயது 30). என்ஜினீயர்.

    இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மேல்திருக்காஞ்சி வீட்டில் இருந்தபோது இவரது செல்போனுக்கு டெலிகிராம் செயலி மூலம் அனுசியா என்ற பெண் பெயரில் மெசேஜ் வந்தது.

    அதில் கிரிப்டோ டாஸ்க் என்ற செயலி மூலம் பணத்தை செலுத்தினால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதனை நம்பிய விஜயகுமார் முதலில் அவரது வங்கி கணக்கு மூலம் ரூ.5 ஆயிரம் செலுத்தி கிரிப்டோ டாஸ்க் செய்து முடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த தொகை வரவில்லை. இதுகுறித்து அவர் மெசேஜ் அனுப்பினார். அதில் மேலும் பணத்தை செலுத்தினால் மட்டுமே முன்பு செலுத்திய பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என தகவல் வந்தது.

    இதனை நம்பிய அவர் அடுத்தடுத்து ரூ.33 ஆயிரம், ரூ.65 ஆயிரம், ரூ.1 லட்சம் என பணத்தை செலுத்தியுள்ளார். மொத்தம் ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் செலுத்தியுள்ளார். ஆனால் பணம் இரட்டிப்பாகவில்லை. கொடுத்த பணமும் திரும்பி வரவில்லை. பணம் குறித்து கேட்ட அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    இதனால் விரக்தி அடைந்த விஜயகுமார் இதுகுறித்து மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசத்தியா ஆகியோர் சம்பந்தப்பட்ட செயலி மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெண் பெயரில் மெசேஜ் அனுப்பி நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×