search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமிமலையில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை
    X

    நடராஜர் சிலை சுவாமிமலையில் இருந்து டெல்லிக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

    சுவாமிமலையில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை

    • மக்கள், சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.
    • இந்த நடராஜர் சிலை 28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்டது.

    சுவாமிமலை:

    டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9,10-ந் தேதிகளில் 'ஜி-20' மாநாடு நடைபெற உள்ளது.

    மாநாட்டு அரங்கத்தின் முகப்பு பகுதியில் மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் இயங்கும், இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில் உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையில் உள்ள தேவசேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான ராதாகிருஷ்ணன், ஸ்ரீகண்டன், சுவாமிநாதன் ஆகியோர் நடராஜர் சிலையை வடிவமைக்கும் பணியை தொடங்கினர்.

    75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த சிலையை நேற்று இந்திரா காந்தி தேசிய கலை மைய தலைவர் ஆர்த்தல் பாண்டியா தலைமையில், மைய அலுவலர்கள் ஜவகர் பிரசாத், மனோகன் தீட்சத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து சிலை டெல்லிக்கு கண்டெய்னர் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள், சாலையின் இருபுறங்களிலும் திரண்டு நின்று மலர் தூவி வழியனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக ஸ்தபதி கள் கூறியதாவது:-

    டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உலோகத்தால் ஆன நடராஜர் சிலை சோழர் கால முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் 'ஜி-20' மாநாட்டு முகப்பில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது.

    சிலையில் மீதமுள்ள 25 சதவீத பணிகளை மேற்கொள்ள இங்கிருந்து 15-க்கும் மேற்பட்ட ஸ்தபதிகள் டெல்லி செல்கிறார்கள்.

    அங்கு சிலை முழுமையாக வடிவமைக்கப்பட்டு நிறுவப்படும். இந்த நடராஜர் சிலை 28 அடி உயரம், 21 அடி அகலம் கொண்டது.

    25 டன் எடை உள்ள இந்த சிலை ரூ.10 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    உலகத்திலேயே இந்த சிலை தான் மிகப்பெரியது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×