search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு
    X

    ரெயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    சிறப்பு ரெயிலுக்கு வரவேற்பு

    • நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு சென்று அடைந்தது.
    • ரெயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    பெங்களூர்- வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்தது.

    அந்த அறிவிப்பில் 25-ந் தேதி, வரும் 1, 8 மற்றும் 15-ந் தேதிகளில் ( சனிக்கிழமைகளில்) பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும், 26-ந் தேதி, வரும் 2, 9 மற்றும் 16-ந் தேதிகளில் ( ஞாயிற்றுக்கிழமைகளில் ) வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கும் இடையே 4 வாரங்கள் புதிய சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்தது.

    அதன்படி இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை நேற்று ( சனிக்கிழமை ) பெங்களூரில் இருந்து தொடங்கியது. நேற்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கன்டோன்மென்ட் ,கிருஷ்ணாபுரம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ,தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு சென்று அடைந்தது.

    வரவேற்பு

    இந்த சிறப்பு ரெயிலை வரவேற்கும் விதமாக தஞ்சாவூருக்கு ரெயில் வந்த போது சில நிமிடம் நின்றது. அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் இறங்கிய பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். அப்போது பெங்களூர்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதனிடையே மறுமார்க்கமாக இந்த ரெயில் நேற்று இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திருவாரூர், தஞ்சை, திருச்சி, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இன்று மதியம் பெங்களூருக்கு சென்றடைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, செல்லகணேசன், வக்கீல் உமர்முக்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×