search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்
    X

    குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கட்டணங்களை தவணை முறையில் செலுத்தலாம்: சென்னை குடிநீர் வாரியம் தகவல்

    • வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும்.
    • தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் செலுத்தலாம்.

    சென்னை :

    இதுகுறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் குடிநீர் இணைப்பு மற்றும் கழிவுநீர் இணைப்புகளை எளிதில் பொதுமக்கள் பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு திட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் கடந்த 6-ந் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இத்திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பைப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதி அல்லது பணிமனை அலுவலகங்களில் நேரிடையாகவும், தொலைபேசி எண் 044-45674567 மற்றும் இணையதளம் https://cmwssb.tn.gov.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். உரிய ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் ஆவணங்கள் உரிமையாளரிடம் சரிபார்க்கப்பட்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று சட்டத்திபடி குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பின்னர் உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர், இணைப்பிற்குரிய முழுத் தொகையையோ அல்லது முதல் தவணைத் தொகையையோ செலுத்தியவுடன் இணைப்புகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினருக்கு இணைப்புக் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளுக்கான கட்டணங்கள் (சாலை வெட்டு மறுசீரமைப்புக்கான கட்டணங்கள் உள்பட) சென்னை குடிநீர் வாரியத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

    தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) 1,800 சதுர அடி வரை இணைப்புக் கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்கள் (உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணங்கள் உள்பட) அனைத்து கட்டணங்களும் ஒரே தவணையாகவோ அல்லது 10 தவணைகளில் (6 மாதங்களுக்கு ஒருமுறை 5 ஆண்டுகளில்) செலுத்தலாம்.

    தரை தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் கூடிய மாடி கட்டிடங்கள் (குடியிருப்புகள் மற்றும் பகுதி வணிக கட்டிடங்கள்) மற்றும் வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய 3 மாடி கட்டிடங்கள் 2,700 சதுரஅடி வரை குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு பெறுவதற்கு ஒரே தவணையாகவோ அல்லது 3 தவணைகளில் (ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, 18 மாதங்களில்) செலுத்தலாம்.

    பிற வகையான கட்டிட உரிமையாளர்கள், கழிவுநீர் மற்றும் குடிநீர் இணைப்பிற்கான முழு கட்டணத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி இணைப்பை பெற்றுக் கொள்ளலாம்.

    இணையம் வழியாக செலுத்தலாம்

    விண்ணப்பதாரர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புக் கட்டணங்களை இணைய வழியிலான வசதியை பயன்படுத்தியோ, ரொக்கமாகவோ அல்லது வங்கி வரைவோலை மூலமாகவோ அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் செலுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×