search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு தலைமை மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கீடு
    X

    விழாவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டனர். 

    அரசு தலைமை மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கீடு

    • அருப்புக்கோட்டை, ராஜபாளையத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளை மேம்படுத்த ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அமைச்சர்கள் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினவிழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் ரூ.1.30 கோடி அளவில் 6 துணை சுகாதார மையங்களும், சிவகாசி சுகாதார மாவட்டத்தில் ரூ.2.78 கோடி அளவில் 12 துணை சுகாதார மையங்களும், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் துறை மூலம் ரூ.31 லட்சத்தில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்டையும் என மொத்தம் ரூ.4.39 கோடி மதிப்பிலான கட்டிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர்கள் பேசியதாவது:-

    தமிழகத்தில் முதல்முறையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு, அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் என 2 அரசு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு ரூ.70.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது மட்டுமல்லாமல், நிதிநிலை அறிக்கையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்கு ரூ.2.33 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் அமைப்பதற்கும், மல்லாங்கிணறு, எம்.புதுப்பட்டி, குன்னூர், தாயில்பட்டி, பந்தல்குடி மற்றும் நரிக்குடி ஆகிய பகுதிகளில் ரூ.400.82 கோடி மதிப்பில் வட்டார அளவிலான பொது சுகாதார மையங்கள் அமைப்பதற்கும், வாடகை கட்டிடங்களில் இயங்கும் 7 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.2.27 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கும், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.18.19 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டப்பணிகள் விருதுநகர் மாவட்டத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 60 சதவிகிதம் பேர் முழுமையாக பரிசோ திக்கப்பட்டுள்ளார்கள். 79 லட்சம் பேருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டுள்ளது. மிக விரைவில் முதல்வரின் லட்சியமாக தமிழகத்தில் ஏழை, எளியோர் ஒரு கோடி பேருக்கு மருந்து பெட்டகம் 2 மாதங்களில் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    விழாவில், மருத்துவக்கல்வி இயக்ககத்தின் இயக்குநர் நாராயணபாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், குடும்பநலத்துறை இயக்குநர் ஹரிசுந்திரி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் சுமதி ராஜசேகரன்(விருதுநகர்), முத்துலட்சுமி விவேகன்ராஜ்(சிவகாசி), அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சங்குமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×