என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரை ஆசிரமத்தில் மனைவி சேர்ந்ததால் கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர்
- மதுரை ஆசிரமத்தில் மனைவி சேர்ந்ததால் கடை உரிமையாளரை, வாலிபர் தாக்கினார்.
- இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி நடுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 32). இவர் அதே பகுதியில் பெயிண்ட் கடை வைத்துள்ளார்.
இவரது கடையில் தென்காசி மாவட்டம் ராயகிரி நடுத்தெருவை சேர்ந்த கண்ணன்(42) என்பவரின் மனைவி ஜெய பிரபா(35) வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி ஜெயபிரபா திடீரென மாயமானார். தனது மனைவியை கண்ணன் பல இடங்களில் தேடினார். மேலும் பலரிடம் விசாரித்தார்.
அப்போது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒரு ஆசிர மத்தில் ஜெயபிரபா தங்கியிருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற கண்ணன், தன்னுடன் வருமாறு மனைவியை அழைத்தார்.
ஆனால் ஆசிரமத்திலேயே இருக்க விரும்புவதாக கூறி அவருடன் செல்ல ஜெ யபிரபா மறுத்துவிட்டார்.மனைவி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு அவரது கடை உரிமையாளர் கதிரேசன் தான் காரணம் என நினைத்து கண்ணன் அவர் மீது ஆத்திரமடைந்தார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று பெயிண்ட் கடைக்கு சென்ற அவர், மனைவி ஆசிரமத்தில் சேர்ந்ததற்கு கதிரேசன்தான் காரணம் எனக்கூறி கதிரேசனுடன் தகராறு செய்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கண்ணன் அவரை அடித்து உதைத்தார்.
இதுகுறித்து தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் கதிரேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






