search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பழக்கடைகாரரிடம் ரூ.5 ½ லட்சம் மோசடி
    X

    அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பழக்கடைகாரரிடம் ரூ.5 ½ லட்சம் மோசடி

    • அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ரூ.5 ½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை.

    விருதுநகர்

    சிவகாசி சாரதா நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது62). பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி.

    பட்டதாரியான இவர் ஜெராக்ஸ் எடுப்பதற்கு திருத்தங்கல் செங்கமல நாச்சியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வது வழக்கம். அந்த கடையின் உரிமையாளர் முத்து பாண்டியராஜனுக்கு அறிமுகமானவர்.

    அதனால் முத்துவிடம் தான் அரசு பொதுத் தேர்வுக்காக தயார் செய்து வருவதாக மகாலெட்சுமி கூறியுள்ளார். இதையடுத்து பாண்டியராஜனை சந்தித்த முத்து தனக்கு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த ரவி என்பவரை தெரியும் என்றும், அவருக்கு தலைமை செயலகத்தில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், பலருக்கு ஏற்கனவே வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

    இதை நம்பிய பாண்டிய ராஜன் ரவியிடம் அதுபற்றி விசாரித்துள்ளார். அப்போது அவர் வேலை வாங்கி தர முடியும் என்றும் ரூ.5½ லட்சம் செலாகும் என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 6 தவணைகளில் ரூ.5 ½லட்சம் ரவிக்கு பாண்டியராஜன் கொடுத்தார். அதன்பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியான போது மகாலட்சுமிக்கு வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து ரவியிடம் விசாரித்த போது விரைவில் ஆர்டர் வரும் என்று கூறியுள்ளார்.

    அவர் கூறியபடி வணிக வரித்துறையில் பணி கிடைத்திருப்பதாக மகாலட்சுமிக்கு ஆர்டர் வந்துள்ளது. மகாலெட்சுமி அது குறித்து விசாரித்த போது அந்த ஆர்டர் போலியானது என தெரியவந்தது.

    இதையடுத்து ரவி, முத்துவிடம் பணத்தை திருப்பி கொடுக்குமாறு பாண்டியராஜன் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்க முடியாது என கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் பாண்டியராஜன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் திருத்தங்கல் போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×