search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரதட்சணை கேட்டு மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டு சென்ற வங்கி ஊழியர்
    X

    வரதட்சணை கேட்டு மனைவியை பெற்றோர் வீட்டில் விட்டு சென்ற வங்கி ஊழியர்

    • வரதட்சணை கேட்டு மனைவியை வங்கி ஊழியர் கொடுமைப்படுத்தினார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காமராஜர் வாசகசாலை தெருவைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 21). இவருக்கும், சென்னையில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் மாரியப்பன் (33) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர் தனது மனைவியுடன் 7 மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தியுள்ளார். பின்னர் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

    அவர் நீண்ட நாட்களாக மனைவியை அழைத்துச் செல்ல வராததால் வந்து அழைத்துச் செல்லும்படி பவித்ராவின் பெற்றோர் கேட்டுள்ளனர். அப்போது மேலும் 10 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் கொடுத்தால் தான் மனைவியை அழைத்துச் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி கடந்த 4.7.2021 அன்று ராஜபாளையம் மகளிர் போலீசில் பவித்ரா புகார் செய்துள்ளார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது மாரியப்பன் தனது மனைவியை ஒரு மாதத்தில் அழைத்துச் செல்வதாக கூறினார். ஆனால் அதன் பிறகு அவர் மனைவியை அழைத்துச் செல்லவில்லை.

    இதைத்தொடர்ந்து பவித்ரா ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் மகளிர் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

    அதன்படி ராஜபாளையம் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மரிய பாக்கியம், பவித்ராவின் கணவர் மாரியப்பன், அவரது பெற்றோர் சுப்பையா, பொன்னுத்தாய் மற்றும் உறவினர் மஞ்சுளா தேவி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×