search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துவாச்சாரி எலக்ட்ரீசியன் உயிரை பறித்த சாலை பள்ளம்
    X

    விபத்தை ஏற்படுத்திய பஸ்.

    சத்துவாச்சாரி எலக்ட்ரீசியன் உயிரை பறித்த சாலை பள்ளம்

    • ஆற்காடு ரோட்டில் பாதாள சாக்கடை பணியால் விபரீதம்
    • பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் ராம் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ராம் நேற்று இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார்சைக்கிள் சென்றார்.

    பின்னர் அவர் வேலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். அவரது பின்னால் விளாப்பாக்கம் செல்லும் அரசு பஸ்சும் சென்றது.

    காகிதப்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே ராம் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையில் இருந்த மாடு ஒன்று குறுக்கே வந்ததால் சாலை பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் இறங்கியது.இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும் பஸ்சும் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் ராமின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் அங்கு வந்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து நடந்ததும் பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. எனவே பஸ்சில் இருந்த சில பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அதில் ஒரு சிலர் பஸ்சின் பின்புறம் காலால் உதைத்தனர். இதை பார்த்த போலீசார் அதில் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பஸ்சையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பயணிகள் வேறு பஸ்களில் ஏறிச்சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் -ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக சாலையின் ஒரு பகுதியை மட்டுமே இருவழிப் போக்குவரத்துக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் இந்த நிலை உள்ளது. மேலும் அங்கு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் பலர் மது குடித்துவிட்டு சாலையில் அதிேவகமாகவும் செல்கின்றனர். ஆங்காங்கே மாடுகளும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன.

    பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்பட்டு இருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே ஆற்காடு சாலையில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×