search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்
    X

    கெங்கநல்லூர் ஊராட்சியில் நடந்து வரும் பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகளை வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் பார்வையிட்டார். உடன் பி.டி.ஓ. சுதாகரன், ஒன்றிய கவுன்சிலர் மகாலிங்கம், ஊராட்சி தலைவர் செந்தில்குமார்.

    தரமற்ற முறையில் கட்டப்பட்ட பள்ளி கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்

    • அதிகாரிகள் ஆய்வு
    • குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தரமானதாக கட்ட வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

    இந்த பணிகள் தரமாக செய்யப்படுகிறதா என அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அதன்படி நேற்று வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி, பொறியாளர்கள் சிவக்குமார், பிரியா, பணிமேற்பார்வையாளர் அபிராமி ஆகியோர் அணைக்கட்டு ஒன்றியத்தில் நடைப்பெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தனர்.

    இதனையடுத்து கெங்கநல்லூரில் நடைப்பெற்று வரும் நிழற்கூடம் கட்டும் பணி, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் கட்டும் பணி உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணியையும் பார்வையிட்டனர்.

    அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடம் சேதம் அடைந்தது. இதனால் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.

    அங்கு சுமார் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய பள்ளி கட்டிடங்கள் கட்ட கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.

    இந்த நிலையில் பள்ளி கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து வந்தன.

    புகாரின் அடிப்படையில் செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி கட்டிடம் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவது தெரிந்தது.

    பின்னர் பள்ளி கட்டிட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டாம் என பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும் பள்ளி கட்டிடத்தை மாற்று இடத்தில் அளவீடு செய்து முதலில் இருந்து துவங்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    தற்போது 60 சதவீதம் கட்டுமான பணிகள் நிறைவுற்றிருந்த நிலையில் பள்ளி கட்டிடத்தை தரமற்ற முறையில் கட்டியதாக அதிகாரிகள் கட்டிடப் பணியை நிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டிடப்பணியை தரமானதாக கட்ட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர்.

    Next Story
    ×