search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைகள்
    X

    இறந்து கிடந்த ஆடுகள்.

    2 ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைகள்

    • கிராம மக்கள் அதிர்ச்சி
    • வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து

    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகம் 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இதனுடைய எல்லைப் பகுதி ஆந்திர மாநிலம் எல்லை வரை விரிந்து உள்ளது, வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன.

    யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது.அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது தற்போது சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார்ஏரி மற்றும் வலசை பகுதியில் பாறைகள் மீது பெரிய சிறுத்தைகள் 2 படுத்துக்கொண்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை கண்ட ஆடு, மாடு மேய்ப்பவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.

    சிறுத்தைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதாகவும் மேலும் கிராம பகுதியை ஒட்டிய படி இரவு நேரங்களில் உலா வருவதாக கூறப்படுகிறது.

    குடியாத்தம் கல்லப்பாடி காப்புக் காடுகள் மற்றும் வீரிசெட்டிபல்லி காப்புக் காடுகள் பகுதியில் காட்டின் நடுவே வனத்துறையினர் கொட்டகை அமைத்து தங்கி இரவு முழுவதும் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொகிலி, கோவிந்தன், சுந்தரேசன் இவர்களுக்கு சொந்தமான ஆடுகள் காலையில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு மாலையில் அவர்களின் வீட்டில் உள்ள பட்டிக்கு வந்து சேரும் சைனகுண்டா கிராமம் ஆந்திர தமிழக எல்லையில் வனப்பகுதி ஒட்டியபடி உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் சிறுத்தைகள் சைனகுண்டா கிராமத்திற்குள் புகுந்து மொகிலி மற்றும் கோவிந்தனின் ஆடுகளை கடித்து குதறி உள்ளது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் வருவதற்குள் சிறுத்தைகள் தப்பி ஓடியுள்ளன. தப்பி ஓடிய சிறுத்தைகள் அதே கிராமத்தைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவருடைய ஆட்டை கடித்து வனப்பகுதியில் இழுத்துச் சென்றுள்ளது சிறுத்தைகள் கடித்த மொகிலி மற்றும் கோவிந்தன் ஆடுகள் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தன.

    மாலை வேலைகளிலே கிராமத்திற்கு நுழைந்து ஆடுகளை வேட்டையாடிய சம்பவத்தால் சைனகுண்டா கிராம மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் சிறுத்தைகள் புகும் அபாயம் உள்ளதாகவும் அச்சப்ப டுகின்றனர்.சைனகுண்டா பகுதியில் வனத்துறையின் சோதனை சாவடி உள்ளது வனத்துறையின் ஓய்வு விடுதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊருக்குள் சிறுத்தைகள் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×