

அன்னதானப்பட்டி:
சேலம் மாநகர போலீசாரால் குற்ற வழக்குகளின் போது பஸ்-1, லாரி-2, கார்-2, ஆட்டோ-6, இரு சக்கர வாகனங்கள்-484 என மொத்தம் 495 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமை கோரப்படாத இந்த வாகனங்களை ஏலம் மூலம் விற்பனை செய்யும் நிகழ்ச்சி அன்னதானப்பட்டி, லைன்மேட்டில் உள்ள மாநகர காவலர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர தலைமையிட காவல் துணை ஆணையாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மாநகர ஆயுதப்படை கூடுதல் காவல் ஆணையாளர் ரவிச்சந்திரன், சேலம் தெற்கு வட்டார வருவாய் ஆய்வாளர் சரவணன், சேலம் தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ராமரத்தினம் மற்றும் சேலம் மாவட்ட அரசு தானியங்கி செயற்பொறியாளர் தேவப்பிரியா ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஏலத்தில் 292 பேர் கலந்து கொண்டனர். பொது ஏலத்தின் மூலம் மொத்தம் ரூ.35 லட்சத்து 27 ஆயிரம் அரசுக்கு வருமானம் கிடைத்தது.