search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி, திருவாரூரில் பரபரப்பு- 2 ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

    • தப்பிப்பதற்காக கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார்.
    • திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சோரீஸ்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 45). வக்கீலான இவர் நகை அடகு கடையும் நடத்தி வந்தார்.

    இவர் கடந்த மாதம் 22-ந்தேதி சோரீஸ்புரத்தில் உள்ள தனது அடகு கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அவர்களிடம் இருந்து தப்பித்து செல்ல முத்துக்குமார் கடையை விட்டு வெளியே ஓட முயன்றார். இருப்பினும் அந்த கும்பல் அவரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்தது.

    இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கடந்த 2003-ம் ஆண்டு தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ராஜேஷின் அண்ணன் ஆத்திப்பழம் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார். அவரது உடல் கடந்த 2006-ம் ஆண்டு தோண்டி எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ராஜேஷ் மற்றும் வக்கீல் முத்துக்குமார் ஆகியோர் குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய வக்கீல் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அருகே வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை வழக்கில் ராஜேஷ் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் ஜாமீனில் வெளியே வருவதற்கு கடந்த 3 ஆண்டுகளாக வக்கீல் முத்துக்குமார் இடையூறாக இருந்து வந்ததால், ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் தூண்டுதலின்பேரில் ஒரு கும்பல் முத்துக்குமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து வழக்கு தொடர்பாக 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கும்பலை கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார். அதன்பேரில் ரூரல் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஸ்டீபன், சிவக்குமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய கொலையாளிகளில் ஒருவரான ஆறுமுகநேரியை சேர்ந்த பாஸ்கரை மும்பையில் வைத்து தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து கைது செய்தது. மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் உள்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து 5 பேரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலையில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ராஜேசின் சகோதரரான கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ்(38) என்பவர் புதுக்கோட்டை அருகே தட்டப்பாறையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

    உடனே தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் தலைமை காவலர் சுடலைமணி உள்பட 7 பேர் கொண்ட குழு அங்கு விரைந்து சென்றது. அப்போது அங்கு பதுங்கி இருந்த ஜெயபிரகாஷ் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார்.

    ஆனால் அவரை போலீசார் சுற்றி வளைத்தனர். எனவே தப்பிப்பதற்காக கையில் இருந்த அரிவாளால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ பிரபு, காவலர் சுடலைமணி ஆகிய இருவரையும் ஜெயபிரகாஷ் கையில் வெட்டினார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியால் ஜெயபிரகாசின் காலில் சுட்டார். இதனால் அவர் ஓட முடியாமல் சுருண்டு விழுந்தார்.

    உடனே அவரை போலீசார் கைது செய்தனர். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஜெயபிரகாஷ் மற்றும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மற்றொரு செய்தி...

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (34).

    வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளரான இவரை 8 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இதனையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.

    கொலை சம்பவம் நடந்த 12 மணி நேரத்தில் நீடாமங்கலத்தை சேர்ந்த ஸ்டாலின் பாரதி (வயது 32), வீரபாண்டியன் (29), சூர்யா (21), அரசு (20), மாதவன் (21) ஆகிய 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து மீதமுள்ள கொலையாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா அருகில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான தனிப்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பிரவீன் பதுங்கியிருந்த இடத்தை நெருங்கிய போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே பிரவீன் தப்பி ஓட முயன்றார். சுதாரித்து கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்ற முயன்றனர்.

    ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீன் தான் மறைத்து வைத்திருந்த வாளால் சப்-இன்ஸ்பெக் டர் இளங்கோவை வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார். இருப்பினும் பிரவீனை பிடிக்க முயன்றபோது அவரை மீண்டும் தாக்கி உள்ளான்.

    இதனால் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர் ராஜேஸ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் முட்டுக்கு கீழே காலில் சுட்டார். இதில் பிரவீன் காலில் காயம் ஏற்பட்டு கீழே விழுந்தார்.

    இதையடுத்து பிரவீன் மற்றும் அவரால் வெட்டப்பட்டு காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகிய 2 பேரையும் போலீசார் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நள்ளிரவில் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு வந்து குற்றவாளி பிரவீனிடம் விசாரணை நடத்தினார். மேலும் சிகிச்சை பெறும் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவிடமும் விசாரணை நடத்தி அவரின் உடல் நலன் குறித்து கேட்டறிந்தார்.

    இதையடுத்து குற்றவாளி பிரவீன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    பிடிப்பட்ட ரவுடி பிரவீன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கொலையாளிகள் 6 பேர் சிக்கி உள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×