சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள், போக்சோ சட்டத்தில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அவர்கள் இருவருக்கும் தலா, 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் உள்பட 2 பேருக்கு 20 ஆண்டு சிறை
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவரை மோரமடுகு அடுத்த கோவில்கொட்டாயை சேர்ந்த வேடியப்பன் (28) என்பவர் ஆசை வார்த்தை கூறி பழகியுள்ளார். அவரிடம் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேடியப்பன் தன் நண்பர் குணசேகர் (29) என்பவருடன் சேர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வேடியப்பன், குணசேகர் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட வேடியப்பன் அவருக்கு துணையாக இருந்த குணசேகர் இருவருக்கும் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள், போக்சோ சட்டத்தில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா, 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மேலும் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com