search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி ஈச்சம்பட்டியில் ஜல்லிக்கட்டு
    X

    திருச்சி ஈச்சம்பட்டியில் ஜல்லிக்கட்டு

    • ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 21 பேர் காயம்
    • வெற்றி பெற்ற காளை, வீரர்களுக்கு 3 லட்சம் ரூபாய் அளவிலான பரிசுகள் வழங்கப்பட்டது

    மண்ணச்சநல்லூர்,

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். 4-ம் ஆண்டாக இந்த ஆண்டு திருவிழா நடைபெற்றது. இதற்காக ஊரின் மையப்பகுதியில் வாடிவாசல் அமைக்கப்பட்டது.முன்னதாக மாடுபிடி வீரர்கள் 424 பேர் பதிவு செய்து இருந்த நிலையில் சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். 415 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி, தர்மபுரி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், சேலம், மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் இருந்து 550 மாடுகள் களம் கண்டன.முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 50 பேர் கொண்ட குழுவினராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுக்களாக களம் இறக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணி முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.இதில் ஏராளமான காளைகள் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. சில காளைகள் பிடிபட்டன. பல காளைகள் பிடிபடாமல் மாடுபிடி வீரர்களுக்கு போக்கு காட்டி சென்றது. வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஈச்சம்பட்டி கிராமத்தின் சார்பில் சைக்கிள், கட்டில், பீரோ, மின்விசிறி, டைனிங் டேபிள், பித்தளை அண்டா, சில்வர் அண்டா என சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தன் சொந்த செலவில் ரொக்கப் பணமும் வழங்கினார்.இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டியதில் 21 பேர் காயமடைந்தனர். அதில் 58 பேர் சிறுகாயம் அடைந்து மண்ணச்சநல்லூர் மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆல்பர்ட் மற்றும் பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு பேரவை, விழா குழு கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கல்பாளைம் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×