search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்திய பஸ் நிலையத்தில் 2-வது நாளாக அலை மோதிய மக்கள் கூட்டம்
    X

    மத்திய பஸ் நிலையத்தில் 2-வது நாளாக அலை மோதிய மக்கள் கூட்டம்

    • தீபாவளி பண்டிகை நிறைவடைந்ததை தொடர்ந்து திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலை மோதியது
    • சென்னை, கோவைக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது

    திருச்சி,

    சென்னை, கோவை போன்ற மாநகரில் வேலை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருந்த திருச்சி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் இறுதியில் வந்தனர். பின்னர் விடுமுறை முடிந்து கொண்டாட்டம் நிறைவடைந்து நேற்று மாலை முதல் அந்த மக்கள் சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு புறப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து மக்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்ததால் பஸ்கள் மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை முதல் சென்னைக்கு 162 சிறப்பு பஸ்களும், விழுப்புரம் மண்டலம் சார்பில் 60 பஸ்களும் இயக்கப்பட்டது. அதேபோன்று திருச்சியில் இருந்து கோவைக்கு 112 சிறப்பு பஸ்கள் நேற்று முதல் விடிய விடிய இயக்கப்பட்டது.

    அதேபோன்று திருச்சி மண்டலம் சார்பில் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொதுவாக தீபாவளி பண்டிகை நிறைவடையும்போது தென் மாவட்டங்களுக்கு சென்றிருக்கும் மக்கள் மீண்டும் வேலை நிமித்தமாக திருச்சி மற்றும் சென்னை போன்ற நகருக்கு புறப்பட்டு வருவார்கள்.

    ஆனால் நேற்று வழக்கத்துக்கு மாறாக திருச்சியில் இருந்து நிறைய பேர் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரைக்கு பஸ்களுக்காக மக்கள் காத்திருந்தனர்.

    இதனால் திருச்சியில் இருந்து மதுரைக்கு 35 சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டதாக திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொது மேலாளர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, நேற்று சென்னைக்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை. தாமதம் இல்லாமல் தங்கள் விரும்பிய ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல பஸ் வசதி செய்து தரப்பட்டது என்றார்.

    Next Story
    ×