search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆபத்தான நிலையில்திருச்சி கோட்டை ரெயில்வே  மேம்பாலம்
    X

    ஆபத்தான நிலையில்திருச்சி கோட்டை ரெயில்வே மேம்பாலம்

    • வலுவிழந்து ஆபத்தான நிலையில் திருச்சி கோட்டை ரெயில்வே மேம்பாலம் உள்ளது
    • டெண்டர் முடிந்த நிலையில் பணிகள் தொடங்குவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது

    திருச்சி,

    திருச்சி மாநகர போக்குவரத்தில் பிரதான இடம் வகிப்பது, கோட்டை ரெயில்வே மேம்பாலம். திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியையும், தில்லைநகர், உறையூர், தென்னூர் பகுதிகளை இணைக்கும் விதமாக இந்த ரெயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. திருச்சி - கரூர் ரெயில்வே மார்க்கத்தின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் 1866ம் ஆண்டு கட்டப்பட்டது. 157 வருட பழமையான இந்த பாலம் வலுவிழந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2020 மழையின் போது பக்கவாட்டு மண் சரிந்து பழுது ஏற்பட்டது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்றது. ரூ.2.90 கோடி செலவில் சீரமைக்கும் பணி நடைபெற்று மீண்டும் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது அந்த பாலம் மிகவும் பலவீனமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பாலத்தின் தூண்களும், பக்கவாட்டு சுவர்களும் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு பிளந்து காணப்படுகிறது. கனரக வாகனத்தின் பளு தாங்காமல் பாலத்தின் மீது உள்ள சாலைகளும் பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக ரெயில்வே நிர்வாகம், இந்த பாலத்தின் மீது போக்குவரத்தை தடை செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து ரூ.44 கோடி ரூபாய் செலவில் பாலத்தை புதிதாக கட்டுவதற்கு கடந்த 2022-23 நிதி நிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 50 சதவீதம் மாநகராட்சி, 50 சதவீதம் ரெயில்வே நிர்வாகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான டெண்டரும் கோரப்பட்டிருந்தது.

    இதற்கான டெண்டரும் கடந்த ஆகஸ்ட் மாதமே முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஏனோ பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே அலுவலகத்தில் கேட்டபோது, மாநகராட்சி இதற்கான முன்னெடுப்பு செய்யும் பொழுது அதற்கான முழு ஒத்துழைப்பும் தர நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாநகராட்சி வட்டார அதிகாரிகள் கூறும்போது, டெண்டர் விடப்பட்டு அனைத்து அலுவலக பணிகளும் முடிந்து விட்டது. எனவே அடுத்த ஒரு வாரத்தில் பாலப்பணிகள் தொடங்கும் என்று மட்டும் தெரிவித்தனர்.

    வலுவிழந்து, பலவீனமான நிலையில் உள்ள, இந்த கோட்டை ரெயில்வே மேம்பாலத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் சென்று கொண்டிருக்கி ன்றனர். ஆபத்தை உணர்ந்தவர்களாய் மாநகராட்சி நிர்வாகம் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பது திருச்சி மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×