search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா
    X

    பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா

    • பிரசன்ன வேங்கடாஜலபதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது
    • 26-ந்தேதி தொடங்குகிறது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் குணசீலத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பதியான வைகுண்ட வாசுதேவன் குணசீல மகரிஷியின் தவத்திற்காக பிரசன்ன வெங்கடேசனாக காட்சியளித்த அற்புத ஸ்தலமாகும். அவ்வாறு காட்சி அளித்த புனித தினமான புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

    இங்கு எழுந்தருளிருக்கும் எம்பெருமான் சங்குசக்கரதாரியாக திருமார்பில் லட்சுமி துலங்க கையில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்திலேயே சேவை சாதிக்கிறார். குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரதமுறைப்படி வணங்கினால் அவ்வினைகள் போக்கி அருட்பாலிக்கிறார் என்பது ஐதீகம். மேலும் திருப்பதி சென்று தங்களது பிரார்த்தனைகளை செலுத்த இயலாதவர்களும் அந்த பிரார்த்தனைகளை இந்த கோவிலில் செலுத்தி பலன் பெறுகிறார்கள். எனவே இந்த கோவில் தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும். 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வதும் வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை 7 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடக்கிறது. 27-ந்தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்திலும், 28-ந்தேதி இரவு சிம்ம வாகனத்திலும், 29-ந்தேதி இரவு ஹனுமந்த வாகனத்திலும், 30-ந்தேதி இரவு கருட சேவையும், அடுத்த மாதம் 1-ந்தேதி இரவு சேஷ வாகனத்திலும், 2-ந்தேதி இரவு யானை வாகனத்திலும் சுவாமி வலம் வருகிறார்.

    விழாவையொட்டி வருகிற 3.10.2022 அன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண எழுந் தருளல், 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடாகிறார்.

    8-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடு, பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. சுவாமி வெண்ணை தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9-ம் திருவிழா அன்று தேரோட்டம் வருகிற (5-ந்தேதி, புதன்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் காலை 5.30 மணிக்கு பெருமாள் உபநாச்சியாருடன் தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் காலை 9.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. முக்கிய வீதிகளின் வழியாக தேரோட்டம் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    மாலை 5.30 மணிக்கு தீர்த்தவாரியும் நடக்கிறது. 6-ந்தேதி இரவு சப்தாவரணமும், விழாவின் கடைசி நாளான 7-ந்தேதி இரவு 9 மணிக்கு புஷ்ப பல்லக்கும், 10 மணிக்கு ஏகாந்த மண்டப கும்ப தீபாராதனையும், 10.30 மணிக்கு கண்ணாடி அறை சேவையும் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை நிர்வாக டிரஸ்டி கே.ஆர்.பிச்சுமணி அய்யங்கார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×