search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்  காந்தி மார்க்கெட்டில்  வாகன நிறுத்த வசதி இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி
    X

    பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் வாகன நிறுத்த வசதி இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

    • காந்தி மார்க்கெட்டில் 30 ஆண்டுகளாகியும் எந்த வசதியும் செய்யவில்லை. சிறு மழை பெய்தால் கூட மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடும்.
    • திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் பார்க்கிங் வசதி, குப்பை தொட்டி, தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 1990ம் ஆண்டு காந்தி காய்கறி மார்க்கெட் தொடங்கப்பட்டது. 300 கடைகளுடன் செயல்பட்டு வந்த இந்த மார்க்கெட்டில் 30 ஆண்டுகளாகியும் எந்த வசதியும் செய்யவில்லை. சிறு மழை பெய்தால் கூட மார்க்கெட் முழுவதும் சேறும், சகதியுமாக மாறி விடும். இதன் நடுவேதான் காய்கறிகள் விற்பனை நடக்கும். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

    திண்டுக்கல் மாநகராட்சியாக கடந்த 2014ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட பின் 8 ஆண்டுகள் கடந்த பின்னும் எந்த வித அடிப்படை வசதிகள் இன்றி சுகாதார சீர்கேட்டில் காந்தி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால் மார்க்கெட்டை சீரமைக்க மாநகராட்சி முன்வந்தது. தொடர்ந்து புதிய கடைகள் கட்டப்பட்டன.

    இதில் 128 கமிஷன் கடைகள் மற்றும் 115 சில்லறை விற்பனை கடைகள் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் காந்தி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நாள் தோறும் ரூ.50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    திண்டுக்கல் நகர் பகுதியில் அமைந்துள்ள இந்த காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு வாகன நிறுத்த வசதி இல்லை. இதனால் சாலை ஓரங்களில் கிடைக்கும் இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாக உள்ளது.

    இந்த மார்க்கெட் சுற்றி கோவில்கள், அரசு பள்ளிகள், பொழுது போக்கு இடங்கள் அமைந்துள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் காலை வேளையில் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மார்க்கெட்டில் உள்ள கடைக்காரர்களின் வாகனங்களை கூட நிறுத்த வசதி இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குப்பை தொட்டி இல்லாத மார்க்கெட்டாக இருந்து வருகிறது. காய்கறி கழிவுகளை சாலை ஓரங்களில் வியாபாரிகள் கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வாகன நிறுத்த வசதி, தண்ணீர் வசதி, குப்பை தொட்டி வசதிகள் இல்லாமல் மக்கள் முகம் சுழிக்கும் மார்க்கெட்டாக காந்தி மார்க்கெட் இருந்து வருகிறது. பார்க்கிங் வசதி இல்லாததால் மார்க்கெட்டிற்கு வெளியே சாலையோர கடைகளில் மக்கள் காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் மார்க்கெட்டின் உள்ளே வாடகை செலுத்தி கடை வைத்துள்ள சில்லறை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    இதனால் இவர்களும் சாலை ஓரத்தில் கடைகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாக இருந்து வருகிறது. கோட்டை குளம் சாலை, தாலுகா அலுவலக சாலை, மேற்கு ரத வீதி ஆகிய பகுதிகள் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

    இந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்லும் போது நெரிசலில் சிக்கும் நிலையும் நீடிக்கிறது. திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் பார்க்கிங் வசதி, குப்பை தொட்டி, தண்ணீர் வசதி ஆகியவற்றை உடனடியாக செய்து தர வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×