உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருமூர்த்தி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
Published on

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது.

இந்த சூழலில் கடந்த 19-ந்தேதி மாலை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வரையிலும் வனப்பகுதியில் சாரல் மழையும், பலத்த மழையும் குறிப்பிட்ட இடைவெளியில் பெய்து வந்தது. இதனால் பஞ்சலிங்க அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் தண்ணீரின் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு கடந்த 6 நாட்களாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்தநிலையில் இன்று பஞ்சலிங்க அருவி இயல்பு நிலைக்கு திரும்பியது. அதில் குளிப்பதற்கான சூழல் நிலவியது. அதைத் தொடர்ந்து அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருமூர்த்தி மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் குடும்பத்துடன் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com