search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில் நாளை, பா.ஜ.க. சார்பில் அறப்போராட்டம்
    X

     கூட்டத்தில் முன்னாள் எம்.பி.நரசிம்மன் பேசியபோது எடுத்த படம்.

    ஓசூரில் நாளை, பா.ஜ.க. சார்பில் அறப்போராட்டம்

    • மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்திருப்பது தி.மு.க.வினருக்கு பிடிக்கவில்லை.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. அவசர ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கட்சி அலுவலகத்தில், மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் நிர்வாகிகள் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், நரசிம்மன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ஓசூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திர சூடேஸ்வர சாமி கோவில் ராஜகோபுர கும்பாபிஷேக விழாவில் குழப்பம் விளைவிக்கவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்துடனும், சில அரசியல் சக்திகள், "அமைப்பு " என்ற பெயரில், இயக்கமே இல்லாத ஒரு இயக்கத்தின் பெயரால் குழப்பம் ஏற்படுத்தவும், அங்கு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடக்கின்ற இடத்தில், நமது விதிமுறைகள் கலாச்சார முறைப்படி நடைபெறும் இடத்திற்கு சென்று, நாங்கள்தான் மந்திரம் ஓதுவோம், நாங்கள்தான் யாகம் செய்வோம் என்று தேவையில்லாத உரிமைகளை நிலைநாட்ட முயன்று குழப்பம் செய்துள்ளனர்.

    விழா நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்ற பின்னர், காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆளுங்கட்சி நேரடியாக மோத முடியாமல், பின்வாசல் வழியாக இயக்கம் என்ற பெயரில், நாலைந்து பேரை அனுப்பி இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். எங்குமே நடந்திராத யாருமே கேள்விப்படாத கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட முயன்றதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். போலீசார், இதற்கு ஆதரவாக உள்ள அரசியல் சக்திகளை கண்டறிந்து ஒடுக்குவதை விட்டு, விழா ஏற்பாட்டாளர்களுடன் கலந்து பேசாமல் ,பா.ஜ.க. நிர்வாகிகளை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இது போன்ற கோரிக்கைகளை வைத்து, கடவுள் சன்னிதியில் அநியாயம் செய்ய வந்தவர்களை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஓசூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இந்த நிகழ்வை, நாங்கள் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம். இது போன்ற சம்பவங்கள், வேறு எந்த கோவில் விழாக்களிலும் நடக்கக்கூடாது என்பதை உணர்த்தவும்,, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்தும் வகையில், பா.ஜ.க. மாவட்ட தலைமை சார்பில் 1-ந்தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும். கும்பாபிஷேக விழா வெற்றிகரமாக நடந்திருப்பது தி.மு.க.வினருக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் பா.ஜ.கவின் வளர்ச்சியை தடுக்கும் விதத்திலும், பா.ஜ.க.வினர் ஆன்மீக விழாக்கள் நடத்தக்கூடாது என்ற எண்ணத்திலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போன்ற செயல்கள் மூலம், தி.மு.க.வினர் எங்களை சீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுவார்கள்". இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    Next Story
    ×