என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு: சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்
  X

  இன்று ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு: சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
  • எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

  சென்னை :

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

  அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

  எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ள ஓட்டுப்பெட்டி கடந்த 12-ந்தேதி பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் சட்டசபை வளாகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  ஓட்டு போடும் மேஜையை அடைவதற்கு முன்பு 3 அலுவலர்கள் உட்கார நாற்காலி மற்றும் மேஜைகள் சற்று தூரத்தில் போடப்பட்டுள்ளன. ஓட்டு போட வருவோரின் அடையாள அட்டையை ஒரு அலுவலர், பெயர் பட்டியலுடன் சரிபார்ப்பார். பின்னர் வாக்குச்சீட்டை மற்றொரு அலுவலர் வழங்குவார். இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். 2 வேட்பாளர்களுக்கும் தலா 3 முகவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  வாக்குச்சீட்டில் 'வைலட்' நிற பேனா மூலம் வாக்களிக்க வேண்டும். அதற்கான பேனா வாக்குப்பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும். வாக்குச்சீட்டில் 2 வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் ஒரு கட்டம் இருக்கும். அதில், எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ?, அந்த கட்டத்தில் 'ஒன்று' என்று எழுத வேண்டும். 2-வது வேட்பாளர்களுக்கு, வாக்களிக்க விரும்பினால் 'இரண்டு' என்று எழுத வேண்டும்.

  2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் வாங்கியிருந்தால், 2-வது வாக்கு எண்ணப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஓட்டுப்பெட்டிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து பாதுகாப்புடன் விமானத்தில் தனி இருக்கையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

  தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏ.க்களும் இன்று வாக்களிக்க உள்ளனர். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு 176 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறும். அதேபோன்று, ஒரு எம்.பி.யின் வாக்கு 700 மதிப்பு என்பதாகும். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க 'இளஞ்சிவப்பு' (பிங்க்) நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். எம்.பி.க்கள் வாக்களிக்க 'பச்சை' நிறத்திலான வாக்குச்சீட்டு வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

  இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய 2 எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர்.

  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பு உடையான 'பிபிஇ கிட்' உடை அணிந்திருக்க வேண்டும். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் நாசர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்திசிதம்பரம் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தொற்று ஏற்பட்டு உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும், தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க வரும் 2 எம்.பி.க்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்ற பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, புவனேஸ்வரில் இருந்து வந்துள்ள தேர்தல் பார்வையாளர், புவனேஷ்வர் குமார், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல். ஏ.க்களும், அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர்.

  நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 33 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆகும். இதில் தமிழக எம்.பி.க்கள் (57 பேர்), எம்.எல்.ஏ.க்கள் (234 பேர்) வாக்குகள் 81 ஆயிரத்து 86 என கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது வெற்றி பெற்றவர் யார் என்று அறிவிக்கப்படுவார். அவரே நம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

  ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெறும் புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 6 லட்சத்து 67 ஆயிரம் ஓட்டுகள் உறுதியாகி இருந்தது. தற்போது சிவசேனா உள்ளிட்ட சில மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருப்பதால் 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிகிறது. எனவே 60 சதவீதம் ஓட்டு பெற்று அவர் ஜனாதிபதியாகுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

  Next Story
  ×