திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்

பவுர்ணமியை முன்னிட்டு குவிந்தனர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.17 மணியளவில் தொடங்கியது. பங்குனி உத்திரம் என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்தவாறே இருந்தது.

கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே கிரிவலம் செல்ல தொடங்கினர். வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. பக்தர்கள் தரை சூட்டினால் ஓட்டமும், நடையுமாக சென்றனர்.

கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. நள்ளிரவில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

முன்னதாக அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com