search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அக்னிபாத் திட்டத்தில் தேசிய மாணவர் படை, விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு சலுகை - ராணுவ அதிகாரி பரத்வாஜ் தகவல்
    X

    விழாவில் ராணுவ அதிகாரி பரத்வாஜ் பேசியபோது எடுத்தபடம்.

    அக்னிபாத் திட்டத்தில் தேசிய மாணவர் படை, விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு சலுகை - ராணுவ அதிகாரி பரத்வாஜ் தகவல்

    • கடந்த மாதம் 16-ந் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    இந்திய ராணுவத்தில் இளைஞர்களுக்கு குறுகிய கால ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்யும் திட்டமாக அக்னிபாத் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து அக்னிபாத் திட்டத்தின் கீழ் இளைஞர்களை தேர்வு செய்வதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது அந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பான தகவல்களை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ராணுவத்தின் சார்பில் விழிப்புணர்வாக எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி. பள்ளி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் இந்திய ராணுவ ஆட்சேர்ப்பில் மாற்றங்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா வரவேற்றார். இதில் ராணுவத்தின் கோவை ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, ராணுவத்தில் ஏன் சேர வேண்டும் என்றும், அதன் மூலமாக ஏற்படும் பயன்கள் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:- இந்திய ராணுவத்திற்கு ஆட்சேர்ப்புக்கான முறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சி.இ.இ. என்கிற பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் முதற்கட்ட தேர்வு நடைபெறும். கடந்த மாதம் 16-ந்தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். சி.இ.இ. என்னும் ஆன்லைன் பொதுத்தேர்வு நாடு முழுவதும் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 176 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும். இந்த தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும் என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். என்றார்.

    இதன் பின்னர் நிருபர்களுக்கு பரத்வாஜ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:& இந்திய ராணுவப்படையில் சேவையாற்ற வந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். அக்னிபாத் திட்ட தேர்வுகள் முன்பு மருத்துவம், உடற்தகுதி தேர்வுகளின் அடிப்படையில் வைக்கப்படும். ஆனால் தற்போது இணையத்தில் தேர்வு வைக்கப்பட்டு, அதில் தேர்வானவர்களுக்கு அதன்பின்னர் இந்த தேர்வுகள் நடத்தப்படுகிறது.இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் பதிவு செய்து ரூ. 150 கட்டணம் செலுத்தி தேர்வில் பங்கேற்கலாம். இது தொடர்பான பல்வேறு கையேடுகள் கிடைக்கப்பெறுகிறது. அதேபோல் விண்ணப்பிக்கும் இணையதளத்திலும் பல்வேறு தகவல்கள் உள்ளன. அதனை பங்கேற்பவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தேசிய மாணவர் படை மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. ராணுவத்தில் சேர்த்துவிடுவதாக யாராவது பணம் கேட்டால் அதனை புகாராக தர வேண்டும். அது போன்று ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுக்கு புகார் அளிக்கலாம்.அவர்கள் உங்களை தவறாக வழிநடத்தக்கூடும். இதை யாரும் நம்ப வேண்டாம். இது முழுக்க முழுக்க உங்கள் திறனுடன் தான் தேர்வு செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ராணுவத்தில் சேர்வது மற்றும் அதனால் என்னென்ன பயன்கள் உள்ளன என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கப்படம் மூலமாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் ராணுவ ஆட்சேர்ப்பு துறையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×