

திருப்பூர்:
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'இல்லம் தேடி' கல்வி மையங்கள் திருப்பூர் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மையங்கள் மே மாதத்தில் நடத்துவது தொடர்பாக செயலி வாயிலாக தன்னார்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில் 9 ஆயிரத்து 577 பேர் பங்கேற்றனர். இதில், 19 சதவீதம் பேர் கோடை காலங்களில் இயல்பான வகுப்பை தவிர்த்து வாசித்தல், கதை சொல்லுதல் போன்ற செயல்பாடுகளை செய்யலாம் எனவும், 16 சதவீதம் பேர் 'இல்லம் தேடி' கல்வி திட்டத்தின் மாலை நேர வகுப்பை தொடர்ந்து நடத்தலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு விளையாட்டு வழி சொல்லித் தரலாம் என 14 சதவீதத்தினர், தாங்கள் வெளியூர் செல்வதால் இல்லம் தேடி கல்வி நடத்த இயலாது என 8 சதவீதத்தினர், வேறு சொந்த காரணங்களால் விடுமுறை வேண்டும் என 6 சதவீதம் பேர், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக உதவி செய்யலாம் என 7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேசமயம் 55 சதவீதம் பேர் மாணவர்களில் சிலர் வெளியூர் சென்று விடுவர். எனவே அவர்களுக்கு விடுமுறை வேண்டும் என்று கூறியுள்ளனர். தொடக்க நிலை மாணவர்களுக்கு இன்றுடன் முழு ஆண்டு தேர்வு நிறைவடையும் நிலையில் மே மாதம் இல்லம் தேடி கல்வி வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்கு கோடை விடுமுறை காலங்களில் தன்னார்வலர்கள் கதை சொல்லுதல், நூல் வாசித்தல் போன்ற செயல்களை செய்யலாம். இதற்கான புத்தகங்களை அருகில் உள்ள நூலகங்களில் தன்னார்வலர்கள் உறுப்பினர்களாகி பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளிகளில் வழங்கப்பட்ட பூங்கொத்து மற்றும் பள்ளி நூலகங்களில் உள்ள நூல்களையும் வாசிப்பு இயக்கத்திற்காக தன்னார்வலர்கள் வழங்கலாம். இல்லம் தேடி கல்வி வகுப்பிற்கு வர ஆர்வமாக உள்ள மாணவர்களை வரவழைத்து கோடை விடுமுறையில் வகுப்பு எடுக்கலாம்.
மாணவர்கள் கல்வி பயில எந்த தடையும் இல்லை. இத்தகவலை பெற்றோருக்கு தெரிவித்து அவர்களின் அனுமதி பெறுவது அவசியம். மாலை நேரங்களில் நிழல் சூழ்ந்த பகுதியில் விளையாட்டு வழி கல்வியை கற்பிக்கலாம். மாணவர்கள் வெளியூர் செல்லும்போது, அவர்கள் அங்குள்ள 'இல்லம் தேடி' கல்வி மையத்தில் தாராளமாக பங்கேற்கலாம்.
தன்னார்வலர்களில் விடுமுறை தேவைப்படுவோர் மே 14 முதல், 31-ந்தேதி வரை எடுத்துக் கொள்ளலாம். ஜூன் முதல் வாரத்தில் 'இல்லம் தேடி' கல்வி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு இயக்கம் நடைபெற உள்ளது. இதற்கு தயார்ப்படுத்த அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்து சென்று படிக்க கற்றுத்தர வேண்டும். வாசித்தல் திறனை அதிகரிக்க, கூகுள் ரீட் அலாங்' செயலியை பயன்படுத்தலாம் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.