

திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 19-ந்தேதி ஓட்டுப் பதிவு நடைபெறவுள்ளது.
மாநகராட்சி தேர்தல் பணிகள், ஓட்டுச் சாவடி பணிகள் ஆகியவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஓட்டு சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், தேர்தல் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோருக்கு தபால் ஓட்டுக்கான கடிதம் பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அவர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பம், உரிய ஓட்டுச் சாவடிக்கான, ஓட்டு சீட்டு உள்ளிட்டவை அனுப்பும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் ஓட்டுகள் பெறும் வகையில் ஓட்டுப் பெட்டி மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த ஓட்டுப்பெட்டி மூடி சீல் வைத்து பூட்டப்பட்டது.
மாநகராட்சிக்கான தபால் ஓட்டுகள் இப்பெட்டியில் நேரடியாக வருகிற 21-ந் தேதி மாலை 6 மணி வரை செலுத்தலாம். தபால் மூலமும் அன்று மாலைக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பலாம். இந்த தபால் ஓட்டுக்கான பெட்டி மாநகராட்சி அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கும்.
ஓட்டு எண்ணிக்கை நாளில் எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படும்.
அங்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கும் முன்னதாக தபால் ஓட்டுகள் பிரித்து எண்ணப்படும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.