திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தி பாடத்திட்டம் தொடக்கம்

டெமேட்டா’ சங்கம் உருவாக்கிய எலாஸ்டிக் உற்பத்தி பாடத்திட்டத்துக்கு மத்திய ஜவுளிக்குழு( டெக்ஸ்டைல் கமிட்டி) அனுமதி அளித்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூரில் 200 எலாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. ரப்பர் மற்றும் நூலை பயன்படுத்தி, உள்ளாடைகளில் இணைப்பதற்கான எலாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. இத்துறை சார்ந்து 6000 தொழிலாளர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தொழிலாளருக்கு பயிற்சி அளித்து எலாஸ்டிக் உற்பத்தி துறையை மேம்படுத்தும் பணிகளில் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (டெமேட்டா) முனைப்பு காட்டி வருகிறது

இதற்காக முதலிபாளையம் ‘நிப்ட்- டீ ‘ கல்லூரியுடன் இணைந்து எலாஸ்டிக் உற்பத்தி துறைக்கான சிறப்பு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடத்திட்டத்துக்கு அனுமதி கேட்டு மத்திய ஜவுளிக் குழுவுக்கு (டெக்ஸ்டைல் கமிட்டி) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

‘டெமேட்டா’ சமர்ப்பித்த பாடத்திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்த ஜவுளிக்குழுவின் தொழில்நுட்ப வல்லுனர் குழு, தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதால் எலாஸ்டிக் உற்பத்தி துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டெமேட்டா தலைவர் கோவிந்தசாமிகூறியதாவது:

நமது நாட்டில் எலாஸ்டிக் உற்பத்தி துறைக்கான பாடத்திட்டங்கள் இல்லை. ‘நிப்ட்- டீ’ கல்லூரியுடன் இணைந்து டெமேட்டா’ சங்கம் முதல் முறையாக, எலாஸ்டிக் தயாரிப்புக்கான சிறப்பு பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இப்பாடத் திட்டங்களை கடந்த 2019ல் ஜவுளிக்குழு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். பல்வேறு காரணங்களால் ஒப்புதல் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, எலாஸ்டிக் மெஷின் ஆபரேட்டர் மற்றும் ஓவன் எலாஸ்டிக் மெஷின் ஆபரேட்டர் ஆகிய 2 பாடத்திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இப்பாடத்திட்டங்கள் மூலம் எலாஸ்டிக் தொழிலாளருக்கு ‘சமர்த்’ திட்டம் மூலம் பயிற்சி அளிப்பதற்காக ஜவுளிக்குழு மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது. விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். கூடுதலாக குரோசெட் நேரோ பேப்ரிக் ஜூனியர் சூப்பர்வைசர், ஓவன் எலாஸ்டிக் சூப்பர்வைசர் பாடத்திட்டங்களுக்கும் அனுமதி கோரியுள்ளோம்.

இரு பாடத்திட்டங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் வரும் ஏப்ரல் முதல் தொழிலாளர்களுக்கு எலாஸ்டிக் உற்பத்தி பயிற்சியை துவக்க திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர்களுக்கு  ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மொத்தம் 300 மணி நேரம் செயல் விளக்கத்துடன் கூடிய வகுப்பு நடத்தப்படும். அந்தந்த நிறுவனங்களிலேயே பயிற்சி மையங்களை உருவாக்குவதா அல்லது பொதுவான பயிற்சி மையத்தை உருவாக்கி பயிற்சி அளிப்பதா என ஆலோசித்து வருகிறோம்.

முறையான பயிற்சி அளிப்பதன் மூலம் தொழிலாளர் திறன் அதிகரிக்கும். தவறுகள் தவிர்க்கப்பட்டு திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தி துறை வேகமெடுக்கும். நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள எலாஸ்டிக் உற்பத்தி துறையினருக்கும், தொழிலாளருக்கு பயிற்சி அளிக்க இப்பாடத் திட்டங்கள் கைகொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் மொத்தம் 300 மணி நேரம் செயல் விளக்கத்துடன் கூடிய வகுப்பு நடத்தப்படும். முறையான பயிற்சி அளிப்பதன் மூலம், தொழிலாளர் திறன் அதிகரிக்கும். தவறுகள் தவிர்க்கப்பட்டு, திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தி துறை வேகமெடுக்கும்.

நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள எலாஸ்டிக் உற்பத்தி துறையினருக்கும் தொழிலாளருக்கு பயிற்சி அளிக்க இப்பாடத்திட்டங்கள் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com