கோப்புபடம். 
கோப்புபடம். 

உடுமலை பகுதியில்பனியால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு

பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டி விற்பனைக்கு தயாராகும். பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Published on

உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் வெண் பட்டுக்கூடு உற்பத்தி தொழில் அதிக அளவு உள்ளது. மாவட்டத்தில் 2,778 ஏக்கர் பரப்பளவில் மல்பெரி செடி சாகுபடி செய்யப்பட்டு 1,221 பட்டு புழு வளர்ப்பு மனைகள் வாயிலாக மாதம் தோறும் பல டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது.மத்திய, மாநில அரசுகளின் பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள முட்டை வித்தகங்களிலிருந்து இளம் புழு வளர்ப்பு மனைகளில் முட்டை பொரித்து 7 நாட்கள் பராமரித்து பட்டுக்கூடு உற்பத்தி மனை அமைந்துள்ள விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.பட்டு புழு வளர்ப்பு மனைகளில் 21 நாட்களில் புழு வளர்ந்து கூடு கட்டி விற்பனைக்கு தயாராகும்.

கடந்த சில மாதங்களாக பட்டுக்கூடு கிலோ 500 ரூபாய் வரை மட்டுமே விற்று வந்த நிலையில் தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மார்க்கெட்டில் கிலோ 750 முதல் 800 வரை விற்கிறது. உடுமலை மார்க்கெட்டில் 574 முதல் 650 ரூபாய் என தமிழக மார்க்கெட்களில் சராசரியாக 650 ரூபாய் வரை விற்று வருகிறது. ஆனால் விலை உயர்ந்தாலும் மகசூல் குறைவு காரணமாக விவசாயிகள் பாதித்துள்ளனர். சீதோஷ்ண நிலை மாறி பனிப்பொழிவு காணப்படுவதால் மல்பெரி செடிகளில் குருத்தடி புழு தாக்குதல் அதிகரித்துள்ளது.

மேலும் பட்டுப்புழு வளர்ப்பு மனைகளில் பெருமளவு புழுக்கள் கூடு கட்டாமலும் இறந்தும் சுண்ணாம்பு கட்டி நோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் 25 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது.

இது குறித்து பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கூறியதாவது:-

குளிர் சீதோஷ்ண நிலை காரணமாக பட்டு புழு வளர்ப்பு மனைகளில் உற்பத்தி பெருமளவு பாதித்துள்ளது.100 முட்டை தொகுதியில் வழக்கமாக 80 முதல் 90 கிலோ வரை மகசூல் இருக்கும் மனைகளில் தற்போது 70-75 கிலோ மட்டுமே உற்பத்தியாகிறது. இதனால் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதே போல் கர்நாடக மாநிலத்தில் கூடுதல் விலை கிடைத்து வரும் நிலையில் தமிழகத்தில் பட்டு நூல் உற்பத்தி நிறுவனங்கள் குறைவு காரணமாகவும் வியாபாரிகள் சிண்டிகேட் காரணமாகவும் போதிய விலை கிடைப்பதில்லை. எனவே பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டுக்கூடு விவசாயிகளுக்கு உரிய தொழில் நுட்ப உதவிகள், முட்டை, இளம்புழு வளர்ப்பு மனை, பட்டுப்புழு வளர்ப்பு மனை ஆகியவற்றின் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பட்டு புழு வளர்ப்பு தொழிலுக்கான உபகரணங்கள் மானிய விலையில் வழங்கவும், பட்டுக்கூடு அங்காடிகளுக்கு தேவையான நிதி உதவி, உற்பத்தியாளர்களுக்கு பட்டுக்கூடு கொள்முதல் மானியம் உள்ளிட்ட உதவிகளை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com