

திருப்பூர்:
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் ஓட்டல்கள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டன.
திருப்பூர் மாநகரில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மளிகை , இறைச்சி, காய்கறி கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பஸ், கார், வேன், ஆட்டோக்கள் இயங்கவில்லை.
ஓட்டல்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் பல்வேறு இடங்களில் ஒரு சில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டன.
தாராபுரம் ரோடு, அவிநாசி ரோடு, காங்கேயம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரோந்து வாகனங்கள் மூலம் மாநகரம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தெரு பகுதிகளிலும் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
மாநகரில் உள்ள மேம் பாலங்களில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சரக்கு வாகனங்களும் இயக்கப்படவில்லை. பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சப்ளைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பொருட்களை கொண்டு செல்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.
திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களிடம் போலீசார் விசாரித்து அனுப்பினர். தேவையற்ற காரணங்களுக்காக வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரை பொறுத்தவரை முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறது. கடைகள் அடைப்பு, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மாநகர் பகுதியானது வெறிச்சோடி காணப்பட்டதுடன் மிகவும் அமைதியாக காட்சியளித்தது.
இதேப்போல் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், தாராபுரம், காங்கேயம், வெள்ளகோவில், உடுமலைப்பேட்டை, குண்ட டம், மூலனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், குன்னத்தூர் உள்பட மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அந்தந்த பகுதி போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.