திருப்பூர்-கரூர் மாவட்ட பாசன வசதிக்காகஅமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.சுற்றுக்கள் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது.
கோப்புபடம். 
கோப்புபடம். 
Published on

உடுமலை:

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் உள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் வழியோர கிராமங்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.தென் மேற்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால், கடந்த ஜூலை 15-ந்தேதி அணை நிரம்பியது.

தொடர்ந்து அணை நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.அமராவதி அணையிலிருந்து ஆறு மற்றும் பிரதான கால்வாயில் கடந்த இரு மாதமாக உபரி நீர் திறக்கப்பட்டு வந்ததால் பாசன நிலங்கள் பயன்பெற்று வந்தன. இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து அணைக்கு நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதனால் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டு உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள 8 ராஜ வாய்க்கால் பாசன நிலங்களுக்கு மட்டும் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குட்பட்ட, 8 ராஜ வாய்க்கால்களான கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு வாய்க்கால்களுக்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு கடந்த மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டது.

சுற்றுக்கள் அடிப்படையில் வருகிற செப்டம்பர் 28 வரை நீர் வழங்கப்பட உள்ளது. இதில் அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில் அலங்கியம் முதல் கரூர் வரை வலது கரையிலுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட 21 ஆயிரத்து 867 ஏக்கர் நிலங்களுக்கு முறைப்படி பாசனத்திற்கு நீர் திறக்கவில்லை.அதே போல் புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களுக்கு முறைப்படி பாசனத்திற்கு நீர் திறக்கப்படவில்லை.

அமராவதி அணையின் வாயிலாக பயன்பெறும், மீதமுள்ள பழைய ஆயக்கட்டு பாசன நிலங்கள் மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் என 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்களில் பயிர் சாகுபடி செய்யும் வகையில், தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதன் அடிப்படையில் சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் திறக்க அரசுக்கு, கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம் முதல் கரூர் வலது கரை வரை) பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு அமராவதி ஆற்று மதகு வழியாக 5 ஆயிரத்து 443 மில்லியன் கன அடிக்கு மிகாமலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள புதிய பாசன நிலங்களுக்கு அமராவதி பிரதானக் கால்வாய் வழியாக 2 ஆயிரத்து 661 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 8 ஆயிரத்து 104 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இன்று முதல் 7.2.2023 வரை 135 நாட்களுக்கு (70 நாட்கள் தண்ணீர் திறப்பு 65 நாட்கள் அடைப்பு) என்ற அடிப்படையில் சம்பா சாகுபடிக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டது. இதையடுத்து அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com