குப்பை கழிவுகளில் இருந்து மின்சாரம், இயற்கை எரிவாயு உற்பத்தி திட்டம் - மேயர் தகவல்

குப்பை கொண்டு செல்லும் வாகனங்கள் வேபிரிட்ஜில் எடை போடும் பணி, விஜயாபுரம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கழிவுகள் பிரித்தல் மற்றும் பாறைக்குழியில் போட்டு மூடும் பணி ஆகியவற்றை மேயர் ஆய்வு செய்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினமும் ஏறத்தாழ 500 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரமாகிறது. குப்பை அகற்றும் வாகனங்களின் இயக்கம், குப்பைகளின் அளவு, குப்பை கிடங்கில் அவை கையாளப்படும் நடவடிக்கைகள் குறித்து மேயர் தினேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

குப்பை கொண்டு செல்லும் வாகனங்கள் வேபிரிட்ஜில் எடை போடும் பணி, விஜயாபுரம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கழிவுகள் பிரித்தல் மற்றும் பாறைக்குழியில் போட்டு மூடும் பணி ஆகியவற்றை மேயர் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மேயர் கூறுகையில்: 

மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பெரும் சவாலான பணியாக உள்ளது. தற்போது பணியில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை, அனைத்து வித வாகனங்கள், குப்பைத் தொட்டி குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தற்போது தொடர்ந்து 15 நாள் அனைத்து வாகனங்களிலும் அகற்றப்படும் குப்பை அளவு எடை விவரம் பெறப்படவுள்ளது.

குப்பை கிடங்கு வந்து செல்லும் வாகனங்கள், பயணிக்கும் தூரம், ஆகும் கால அளவு ஆகியவற்றுடன் அகற்றப்படும் குப்பைகளின் அளவு கணக்கிடப்பட்டு ஊழியர் பணித்திறன் கண்டறியப்படும். அதன்படி மேலும் தேவைப்படும் வாகனங்கள், எந்திரங்கள், ஊழியர்கள் ஏற்பாடு செய்து  திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். இது தவிர அடுத்த கட்டமாக நுண்ணுயிர் உரம் உற்பத்தி மையங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளது.

மாநகராட்சி சார்பில் குப்பை கழிவிலிருந்து மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com