

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில அங்கன்வாடி மையங்களில் அடிப்படை வசதிகளில் குறைபாடு உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேல் பள்ளி, கல்லூரிகள் சரிவர செயல்படவில்லை.
ஊரடங்கு காலத்தில் அங்கன்வாடி குழந்தைகள் அனுமதிக்கப்படாததால் குழந்தைகளுக்கான அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்டவை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தன.
தொடர்ந்து, தமிழக அரசு உத்தரவின் பேரில் மதிய உணவுக்கு மட்டும் அங்கன்வாடி குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர்.
அதன்பின் அங்கன்வாடிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. பல்லடம் வட்டாரத்தில் 102 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சில அங்கன்வாடி மையங்கள் தண்ணீர், கழிப்பிடம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளில் பின்தங்கி உள்ளன. பழைய அங்கன்வாடி கட்டடங்கள், சமையலறை உள்ளிட்டவை போதிய பராமரிப்புகள் இன்றி காணப்படுகின்றன.
இதனால் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் அங்கன்வாடி பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கன்வாடிகள் திறக்கப்படாத இடைப்பட்ட காலத்தில், கட்டட பராமரிப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை செய்திருக்க வேண்டும். அடிப்படை வசதிகளில் குறைபாடு இருப்பது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்துகிறது.
உரிய ஆய்வு மேற்கொண்டு, அங்கன்வாடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.