

திருப்பூர்:
உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., வாய்க்காலுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பயன் பெறுகின்றனர். வாய்க்கால் உடைப்பு, பராமரிப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் வீணடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
பல்லடம் அருகே ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போதும் பாசன நீர் ரோட்டில் வழிந்தோடி வீணாகி வருகிறது.
பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதி விவசாயிகள் கூறுகையில்,
‘பல்லடம்-அம்மாபாளையம்-வேலம்பாளையம் வழியாக செல்லும் பி.ஏ.பி., வாய்க்காலுக்கு சமீபத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அம்மாபாளையம் அருகே பாசன வாய்க்கால் தரைமட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு முறை தண்ணீர் திறப்பின் போதும், பல ஆயிரம் லிட்டர் பாசன நீர் வெளியேறி யாருக்கும் பயன்படாமல் ரோட்டில் தேங்கி நின்று வீணாகி வருகிறது.
கோடைக்காலம் நெருங்கி வருவதால், தண்ணீர் தேவை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வீணடிக்கப்படும் தண்ணீரால் வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பாசன நீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‘’ என்றனர்.