search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் கண்ணபுரம் மாட்டுசந்தை விற்பனை
    X

    கண்ணபுரம் மாட்டுச்சந்தையை படத்தில் காணலாம். 

    பொதுமக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் கண்ணபுரம் மாட்டுசந்தை விற்பனை

    • கோவில் திருவிழாவையொட்டி ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த மாட்டு சந்தை தற்போது துவங்கியுள்ளது.
    • பழமையான மாட்டு சந்தையை பார்க்க கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த ஓலப்பாளையம், கண்ணபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விக்ரம சோழீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடக்கிறது. இந்தாண்டு பொங்கல் விழா வருகிற 4ந் தேதியும், தேரோட்டம் 5-ந் தேதியும் நடக்கிறது. கோவில் திருவிழாவையொட்டி ஆயிரம் ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த மாட்டு சந்தை தற்போது துவங்கியுள்ளது.

    மாட்டு சந்தைக்கு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதோடு வாங்கியும் சென்று வருகின்றனர்.

    10ம் நூற்றாண்டில் (1088ம் ஆண்டு) அபிமான சோழ ராசாத்திராசனால் விக்கிரம சோழீஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வீர ராசேந்திர சோழனால் இக்கோவிலுக்கு கொடை வழங்கப்பட்டதற்கும், உழவர்கள், வணிகர்களுக்கு வரி விதிக்கப்பட்டதற்கும், விக்கிரம சோழீஸ்வரர் கோவில் தைப்பூச விழா உள்ளிட்ட பிற விழா நடந்ததற்கும் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.வரலாற்று சிறப்பு மிக்க கோவிலில் முருக கடவுள் ஆறுமுகங்களுடன் காட்சி தருவது சிறப்பு. சேரர்களின் முசிறி (கேரளா) துறைமுகம் முதல் சோழர்களின் பூம்புகார் துறைமுகம் வரை செல்லும் ராசகேசரி பெருவழிப்பாதையில் அமைந்துள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் மாட்டு சந்தை பழமையானதாகும்.

    கொரோனாவுக்கு பின் கடந்த ஆண்டு கூடிய சந்தையை காட்டிலும் இந்தாண்டு மாடுகள் வரத்து அதிகமாகியுள்ளது. பல இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இன்னும் சில நாட்களுக்கு பின் இன்னமும் அதிக வரத்து இருக்கும். பழமையான மாட்டு சந்தையை பார்க்க கிராம மக்கள், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

    சந்தையை ஒட்டி கோவிலின் மணிகள், குஞ்சம், சாட்டை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாடு வாங்க வரும் விவசாயிகள் மாடுகள் வாங்க முடியாவிட்டாலும், சாட்டையை வாங்கி செல்வதும் மாடு வாங்கும் விவசாயிகள் நேர்த்தி கடனாக மாரியம்மனுக்கு மொட்டை அடித்து கோவில் முன்பாக பூஜைகள் செய்து கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கது.

    பொதுவாக மாட்டு சந்தைகளில் மாடுகள் விற்பனையாவதை பார்க்கும் போது சாதாரண விற்பனை போன்று இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் விஷயங்கள் எப்போதுமே ஒருவித ஆச்சர்யத்தை கொடுக்கும்.

    அதுபோன்ற சுவாரசியமான விஷயங்கள், கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் நடக்கிறது. மாட்டை விலை பேசும் போது வியாபாரிகள் இருவர் கைகளில் துண்டை போட்டு விலை பேசுகின்றனர். இது வழக்கமானதாக ஒன்றாக இருந்தாலும் இதற்கு பின்னால் இருக்கும் விஷயங்கள் பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதில் சிலவற்றை ஒருவர் விற்பனை செய்ய, சந்தைக்கு மாடுகளை கொண்டு செல்வர். அங்குள்ள தரகர்கள் வியாபாரிகளை அழைத்து வந்து அந்த மாடுகளை காண்பிப்பர். மாடுகள் பிடித்து போனால் தோளில் இருக்கும் துண்டு கைக்கு வந்து விடும். தரகரும், வியாபாரியும் துண்டை போட்டு கொண்டு பேரத்தை துவங்குவர். வியாபாரி 5 விரல்களை கூட்டி பிடித்தால் 5 ஆயிரம் ரூபாய் என்பது அர்த்தம், மோதிர விரலையும், சுண்டு விரலையும் பிடித்தால் 7 ஆயிரம் ரூபாய் எனவும், சில்லறையை குறிக்க விரல்களில் உள்ள ஒவ்வொரு ரேகையையும் பிடித்து விலையை நிர்ணயம் செய்வது உண்டு. அப்போது தட்டை, வாச்சி, கொழுவு, பணயம் என்ற சொற்களையும் பேசி மாட்டின் விலை நிர்ணயிக்கப்படும். பரிமாறப்படும் சொற்களும் புரியாததாகவே இருக்கும். இத்தனை விரலுக்கு வராதுண்ணா... அதெல்லாம் வரும்ணா... இன்னும் கொஞ்சம் சேர்த்து முடிங்க, இப்படித்தான் விலை பேசப்படுமே தவிர விலையை பற்றி வெளியே தெரியாது.

    மேலும் பேரத்தின் போது மாட்டை பரிசோதிக்கும் போது மாட்டில் இவ்வளவு விஷயங்களா என்பது கொஞ்சம் ஆச்சர்யத்தைத்தான் கொடுக்கும். நிறம், கொம்பு, சுழி, பல் என பலவற்றையும் பார்த்துதான் ஒருவர் சந்தையில் இருந்து மாட்டை வாங்குவார்.

    Next Story
    ×