வரத்து குறைவால் ஆடுகள் விலை உயர்வு

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.இந்த வாரம் நடந்த சந்தையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

மூலனூர் :

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்க சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வருகிறார்கள். இவர்களை தவிர கேரளா, ஆந்திர மாநில வியாபாரிகளும் வருகிறார்கள்.

அதன்படி இந்த வாரம் ஆட்டுச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு எதிர்பார்த்த ஆடுகள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் 10 கிலோ ஆடு ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் நடந்த சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.

இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது :- மூலனூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com