search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நெல் விதைகள் விற்பனை செய்ய தடை
    X

    தாராபுரம் பகுதியில் தனியார் விதை நிலையங்களில் ஈரோடு விதை துணை இயக்குனர் சுமதி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

    தாராபுரம் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நெல் விதைகள் விற்பனை செய்ய தடை

    • விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.
    • ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதி மீறல் ஆகும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டாரத்தில் உள்ள தனியார் நெல் விதை உற்பத்தி மற்றும் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் சுமதி ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    விதை நெல் விற்பனையாளர்களின் விற்பனை உரிமம், விதை இருப்பு மற்றும் விலை விபரப்பலகை, விதை இருப்பு பதிவேடு, விதை கொள்முதல் பட்டியல், விற்பனை பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பதிவேடுகள், முளைப்புதிறன் பரிசோதனை முடிவு அறிக்கை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. பிறகு நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது சான்று செய்த விதைகளையே விற்பனை செய்ய வேண்டும் , உண்மை நிலை விதைகளை விற்பனை செய்யும்போது, விதையின் ஆதாரம், கொள்முதல் பட்டியல், வயல் மட்ட பதிவேடு, முளைப்புத்திறன் அறிக்கை போன்ற பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படவேண்டும். விற்பனை பட்டியலில் ரகம், குவியல் எண், காலாவதி நாள் உட்பட அனைத்து தகவல்களும் இருக்க வேண்டும். வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    விற்பனை செய்யும் போது விற்பனை ரசீது கொடுக்கப்பட வேண்டும். அதில் விதையின் பெயர், ரகம், குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றுடன் விவசாயியின் பெயர் மற்றும் முகவரியுடன் விதை வாங்குபவரின் கையொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.

    மேற்கூறிய விதை விற்பனை தொடர்பான ஆவணங்கள் இல்லாமல் விதை விற்பனை செய்வது விதைச் சட்டம் 1966 விதை விதிகள் 1968 மற்றும் விதைகட்டுப்பாட்டு ஆணை 1983 ஆகியவற்றின் மீது விதி மீறல் ஆகும். இது போன்ற விதை விற்பனை விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் விதை விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் மீது "கடும் நடவடிக்கை" எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது விதை இருப்பிற்கும், புத்தக இருப்பிற்கும் வேறுபாடுகள், நெல் விதை விற்பனை நிலையங்களில் இருப்பு விதைகளின் விபரங்கள் மற்றும் விற்பனை பட்டியல் முறையாக பாராமரிக்கப்படாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 51 ஆயிரம் கிலோ நெல் விதைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    Next Story
    ×