search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் -  கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
    X

    கலெக்டர் கிறிஸ்துராஜிடம் பொதுமக்கள் மனு அளித்த காட்சி.

    பல்லடத்தில் அரசு நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

    • மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 3-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 3-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாமளாபுரம் உள்வட்டம் சாமளாபுரம், இச்சிபட்டி, பூமலூர், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம்,கோடங்கிபாளையம், ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர். இதற்கிடையே கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே காரணம்பேட்டை சங்கோதிபாளையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் மண் கொட்டி பாதை அமைக்க முயற்சித்ததாகவும், இதனை தடுத்து பொதுமக்கள் புகார் அளித்ததால், அளவீடு பணி மேற்கொண்டு அந்த அரசு நிலம் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அரசு நிலத்தை பாதுகாக்க கம்பி வேலி அமைக்க பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசு நிலத்தை மீண்டும் தனியார் ஆக்கிரமிக்காமல், அந்த இடத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில். கரடி வாவி சின்ன குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதே போல பல்லடம் பச்சாபாளையம் விநாயகர் கோவில் அருகே உள்ள பொதுக் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றது. அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ்,பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பல்லடம் துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×