

நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து மேயர், துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடந்துள்ளது.
இந்நிலையில் நெல்லை, பாளை, மேலப்பாளையம், தச்சநல்லூர் ஆகிய 4 மண்டல தலைவர்களுக்கான தேர்தல் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடந்தது.
நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. சார்பாக 43 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. சார்பாக 4 கவுன்சிலர்களும், காங்கிரஸ் சார்பாக 3 கவுன்சிலர்களும், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு கவுன்சிலர்கள் என 4 கவுன்சிலர்களும், ஒரு சுயேட்சை கவுன்சிலரும் உள்ளனர்.
எனவே 4 மண்டலத்திலும் தி.மு.க.சார்பாக போட்டியிடுபவர்களே வெற்றி பெறுவார்கள் என்ற நிலை இருந்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் தலைமையில், மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் மண்டல சேர்மன் பதவிக்கான தேர்தல் நடந்தது.
இதில் தச்சை மண்டல தலைவராக ரேவதி என்பவரும், பாளை மண்டல தலைவராக பிரான்சிஸ், நெல்லை மண்டல தலைவராக மகேஸ்வரி, மேலப்பாளையம் மண்டல தலைவராக கதிஜா இக்லாம் பாசிலா ஆகியோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
ஆனால் அவர்களை எதிர்த்து வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து நெல்லை மாநகராட்சியின் 4 மண்டல தலைவர்களும் வெற்றி சான்றிதழ்களுடன் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல்வகாப் எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றனர்.
தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், தி.மு.க. வை சேர்ந்த கவுன்சிலர்கள் தச்சை சுப்பிரமணியன், பிரபாசங்கரி ஆகியோரும் கலந்து கொள்ள வில்லை. ஏணைய 49 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இன்று பிற்பகல் நிலைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் நடக்கிறது. இதில் கணக்கு குழு தலைவராக சங்கர் குமார், சுகாதார குழு தலைவராக ரம்சான் அலி, கல்வி குழு தலைவராக பவுல்ராஜ், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவராக உலகநாதன், நகரமைப்பு குழு தலைவராக சுதா, பணிகள் குழு தலைவராக வில்சன் மணித்துரை ஆகியோர் தி.மு.க. சார்பாக அதிகார பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளார்கள்.
எனவே இவர்களும், குழு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை நியமன குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.
இதில் தி.மு.க. சார்பாக கோகுலவாணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே அவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.