

நெல்லை:
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அரசு பொது தேர்வு நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு அடுத்த மாதம் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்க உள்ளது.
ஏற்கனவே இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 4 பிரிவுகளாக பிரித்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
ஒரு பிரிவுக்கு 25 முதல் 30 மாணவர்கள் வரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சமூக இடை-வெளியுடன் செய்முறை தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், சேரன்மகாதேவி நெல்லை என கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 120 உயர்நிலைப் பள்ளிகள், 203 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. மொத்தம் 73 மையங்களில் இன்று செய்முறை தேர்வு நடைபெறுகிறது.
அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்கின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட வீரவநல்லூர் பள்ளியில் இன்று செய்முறை தேர்வை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் நெல்லை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள் 22,552 பேரும், பிளஸ்-2 மாணவர்கள் 20,984 பேரும், பிளஸ்-1 மாணவர்கள் 21,751 பேரும் செய்முறை தேர்வில் ஈடுபட்டுள்ளனர்.